இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, வெள்ளை மாளிகையில் ட்ரம்ப்புடன் எடுத்திருந்த புகைப்படத்தை தனது ட்விட்டரின் கவர் பிக்சராக நீண்ட நாள்களாக வைத்திருந்தார். அந்த புகைப்படமானது, இரு நாட்டினரிடையே உள்ள உறவுகளை சுட்டிக்காட்டுவதாக கருதப்பட்டது.
இந்நிலையில் இன்று, இஸ்ரேல் பிரதமர் ட்விட்டரின் கவர் பிக்சரை மாற்றியுள்ளார். தடுப்பூசி எடுத்துக்கொள்வதன் புகைப்படத்தை பதிவிட்டு, இஸ்ரேல் குடிமக்கள், மீண்டும் பழைய வாழ்க்கைக்கு திரும்புகிறோம் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் புகைப்பட மாற்றமானது, சமீபத்தில் அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தேடுக்கப்பட்ட ஜோ பைடனை நெதன்யாகு பாராட்டியதன் எதிரொலியாக இருக்கக்கூடும் எனத் தெரிகிறது.
இதற்கிடையே, அண்மையில் அமெரிக்க நாடாளுமன்றத்தை ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் சூறையாடினர். இந்தப் போராட்டத்திற்கு பின்னணியில் ட்ரம்ப் இருப்பதாக எழுந்த புகாரையடுத்து, அவரின் அனைத்து விதமான சமூக ஊடக கணக்குகளும் முடக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.