அங்காரா: கிழக்கு துருக்கியில் வியாழக்கிழமை (மார்ச்4) ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். காயமுற்ற இருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
துருக்கி ராணுவ உயர் அலுவலர் ஒருவர் விடுத்துள்ள அறிக்கையில், “ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று குர்திஷ் மக்கள்தொகை கொண்ட பிட்லிஸ் மாகாணத்தில், தத்வான் நகருக்கு அருகில் உள்ள செக்மீஸ் கிராமத்திற்கு அருகே விபத்துக்குள்ளானது.
இந்த ஹெலிகாப்டர் பிங்கோலில் இருந்து தத்வானுக்குச் சென்று கொண்டிருந்தபோது, மதியம் 2:25 மணிக்கு (1125 GMT) அலுவலர்களின் தொடர்பை இழந்தது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். பனிப்பொழிவு மற்றும் அதீத மூடுபனி உள்ளிட்ட பாதகமான காலநிலை காரணமாக விபத்து நடந்துள்ளதாக உள்ளூர் தொலைக்காட்சியான ஹேபர்டுர்க் தெரிவித்துள்ளது.
விபத்து நடந்த பகுதி குர்திஷ் படை மக்கள் அதிகமுள்ள இடமாகும். இதனால், ஹெலிகாப்டர் விபத்துக்கு வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடந்துவருகிறது.
2017ஆம் ஆண்டு துருக்கியின் ஈராக் எல்லைக்கு அருகிலுள்ள ஒரு தளத்திலிருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர் மின் இணைப்புகளில் மோதியதில் 13 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.