உலகை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நாடுகளும், தங்கள் நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அதேபோன்று, இஸ்ரேல் நாட்டில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக 20க்கும் மேற்பட்டவர்கள் கூட்டமாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று இந்தக் கட்டுப்பாடுகளை மீறி ஜெருசலேமில் கூடியிருந்த 300க்கும் மேற்பட்டவர்களை இஸ்ரேல் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய காவல்துறையினர், மெரோன் மலையிலுள்ள மதக் கூடங்களில் மக்கள் கூடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், நூற்றுக்கணக்கான போதகர்கள் அப்பகுதியில் திரண்டிருந்தனர்.
இதுகுறித்து விசாரிக்க சென்ற காவல்துறையினர் மீது அவர்கள் கற்களையும், பிற பொருள்களை கொண்டும் தாக்கியுள்ளனர். மேலும், கட்டுப்பாடுகளை மீறி ஆயிரக்கணக்கான போதகர்கள் ரப்பியின் கல்லறையில் கூடி, நெருப்பு மூட்டி நடனமாடியுள்ளனர் எனவும் தெரிவித்தனர்.
இஸ்ரேலில் இதுவரை 16 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் எழுபது விழுக்காட்டினர் கட்டுப்பாடாக மதக் கோட்பாடுகளை பின்பற்றிவருபவர்கள் என்றும் இந்த தீவிர மதக்கோட்பாடுகளை பின்பற்றுபவர்கள் அந்நாட்டின் மக்கள் தொகையில் 12 விழுக்காடு உள்ளனர் என அந்நாட்டின் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் ஜெருசலேமில் கூடிய மக்களால் இரண்டு முதல் மூன்று வாரங்களில் பெரும்பாலான மக்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் வருத்தம் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நிதி வழங்காமல், விதிமுறைகளை மட்டும் அளிப்பதா? மத்திய அரசுக்கு ஓவைசி கேள்வி