1948ஆம் ஆண்டில் இஸ்ரேல் தனி நாடாக அறிவிக்கப்பட்ட நாள் முதல் அந்நாட்டுக்கும், வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே மோதல் போக்கு நீடித்துக்கொண்டே வந்தது.
இஸ்ரேலை தனிநாடாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்காததால் இஸ்ரேல் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைய ஐக்கிய அரபு அமீரகம் தடைவிதித்திருந்தது.
இந்த பிரச்னைகளை தீர்க்க முடிவெடுத்த அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, இருநாடுகளிடையே அமைதி ஏற்படுத்த மேற்கொண்ட தீவிர முயற்சியின் காரணமாக கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதியன்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
அந்த ஒப்பந்தத்தின் படி, தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும் இருதரப்பினரும் நெருங்கி பணியாற்ற முடிவெடுத்துள்ளன. இந்நிலையில், புரிந்துணர்வின் அடிப்படையில் அமீரகத்தின் பாதுகாப்பு நலனைக் கருத்தில் கொண்டு அமெரிக்க அரசிடமிருந்து மேம்பட்ட எஃப் - 35 ரக போர் விமானங்கள் உள்ளிட்ட ஆயுத அமைப்புகளை அந்நாட்டு அரசு கொள்முதல் செய்ய திட்டமிட்டிருந்தது.
முதலில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த இஸ்ரேல் அரசு தற்போது ஆதரவு அளித்துள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் இஸ்ரேலின் ராணுவ பாதுகாப்பை மேம்படுத்த ஒத்துழைப்பதாக அமெரிக்கா அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் அமீரக அரசின் இந்த ஆயுத அமைப்புகளை கொள்முதல் செய்யும் திட்டத்தை ஆதரிப்பதாக இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் பென்னி காண்ட்ஸ் கூட்டாக தெரிவித்துள்ளனர்.