2009ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 10 வருடங்களாக அதிபர் பதவி வகித்துவரும் பெஞ்சமின் நெதன்யாகு இந்த முறை தேர்தலில் கடுமையான சவால்களை சந்திக்கவுள்ளார். அவர் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ள நிலையிலும், அவருக்கு அமெரிக்க அதிபர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் ஆதரவு தெரிவிக்கும் அளவுக்கு நெதன்யாகு சர்வதேச அளவில் அவ்வளவு முக்கியத் தலைவரா... ஒபாமா எதிர்த்த தலைவரை ட்ரம்ப் ஆதரிப்பது ஏன்? அப்படி என்னதான் செய்தார் நெதன்யாகு... யார் இவர் என்பதைப் பற்றி காணலாம்.
யார் இந்த பெஞ்சமின் நெதன்யாகு?
1996இல் தான் முதன் முறையாக போட்டியிட்ட பிரதமர் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றிய பெஞ்சமின் நெதன்யாகுவின் பெயர் தனியார்மயமாக்கல், தாராளமயக்கொள்கைகள் போன்ற நடவடிக்கைகளால் சர்வதேச அளவில் கவனம்பெற்றது.
ஆனால் இதையடுத்து நடைபெற்ற 1999ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்தார். இதன்பிறகு சில காலம் அரசியலிலிருந்து விலகியிருந்த பெஞ்சமின் நெதன்யாகு, 2009ஆம் ஆண்டு பிரதமர் தேர்தலில் மீண்டும் இரண்டாவது முறையாக வெற்றிபெற்று இன்று வரை அப்பதவியில் நிலைத்துவருகிறார்.
இஸ்ரேல் பாலஸ்தீன உறவுகள்
பெஞ்சமின் நெதன்யாகு பதவிகாலத்தில் ஹெப்ரான் உள்ளிட்ட பல அமைதி உடன்படிக்கைகள் கையெழுத்தான போதும், 2014ஆம் ஆண்டு பாலஸ்தீன தீவிரவாத அமைப்பு ஹமாசின் கோட்டையாக கருதப்படும் காசா தங்களுக்குச் சொந்தமான பகுதி எனக்கூறி இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
பெஞ்சமின் நெதன்யாகு ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த இந்தத் தாக்குதலுக்கும் உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்தத் தாக்குதல் குறித்து விமர்சனம் செய்த இரண்டு மத்திய அமைச்சர்களை நெதன்யாகு அதிரடியாக பதவியிலிருந்து நீக்கினார்.
மேலும் ஈரான்-அமெரிக்க அணு ஒப்பந்தம் குறித்தும், ஒபாமாவின் நடவடிக்கைகள் குறித்தும் குற்றம்சாட்டினார் பெஞ்சமின் நெதன்யாகு.
இதுமட்டுமல்லாமல் அரேபியர்களுக்கு எதிரான கருத்துகளை தேர்தல் பரப்புரையின்போது கூறியும் பெயரை கெடுத்துகொண்டார். இருப்பினும் ஒபாமாவின் ஆதரவு இல்லாமலும், பல்வேறு சர்ச்சைகள் சூழ்ந்தபோதும் 2015ஆம் ஆண்டு நடந்த பிரதமர் தேர்தலில் மீண்டும் மூன்றாவது முறையாக வெற்றிபெற்றார்.
ஊழலும்-பெஞ்சமின் நெதன்யாகுவும்
பாலஸ்தீன தேசம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை அவ்வப்போது கூறிவரும் பெஞ்சமின் நெதன்யாகு, இந்தத் தேர்தலில் ஊழல் குற்றச்சாட்டுகளை தாங்கிக்கொண்டு சந்திக்க இருக்கிறார்.
அவர் மீது இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
- பெரும் தொழிலதிபர்களிடம் இருந்து விலை உயர்ந்த பொருட்களை அன்பளிப்பாக பெற்றது.
- ஒரு நாளிதழ் நிறுவனத்தை நிர்பந்தப்படுத்தி செய்திகளை தனக்கு சாதகமாக எழுதவைத்தது.
இஸ்ரேல் தேர்தல்-2019
இந்நிலையில் எதிர்க்கட்சி வேட்பாளரான பென்னி கண்ட்ஸ் ராணுவ தலைமை தளபதியாக பதவி வகித்து மக்கள் அபிமானத்தை பெற்றவர். அமைதியையும் காசா பகுதிக்கான சுமுக உடன்படிக்கையையும் தனது தேர்தல் அறிக்கையில் முன்னிலைபடுத்தியிருக்கிறார்.
ஆனால் பெஞ்சமின் நெதன்யாகுவோ அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஆதரவுடன் இந்த தேர்தலில் களம் காணவுள்ளார்.
இந்தத் தேர்தலின் யார் வெற்றிபெறுவார்கள் என்பதை பொறுத்தே மத்திய கிழக்கு நாடுகளில் அடுத்த ஐந்தாண்டுகள் அமைதி நிலவுமா... அல்லது பதற்றம் நீடிக்குமா... என்பது தெரியவரும் என சர்வதேச அரசியல் நிபுணர்கள் கருதுகின்றார்கள்.
புவியியல் மையமாகவும், மூன்று (யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம்) மதத்தினருக்கும் முக்கிய இடமாக கருதப்படும் இடம் ஜெருசலேம். அதனால்தான் இங்கு ஒரு குண்டூசி விழுந்தால் கூட உலக அரங்கில் பெரும் கவனத்தை ஈர்க்கிறது இஸ்ரேல் நாடு!