ஜெருசலேம்: கரோனா தொற்றின் இரண்டாம் அலை குறைந்துவந்த நிலையில், பத்து நாள்களாக உலகம் முழுவதும் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்துவருகிறது. அமெரிக்கா, பிரான்ஸ், டென்மார்க் நாடுகளில் தொற்று எண்ணிக்கை 1.5 லட்சத்தை எட்டியுள்ளது.
குறிப்பாக, பிரான்ஸ் நாட்டில் கடந்த இரண்டு நாள்களில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது. இதன்காரணமாக மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுவருகின்றன. கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமடைந்துள்ளன.
கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்படுவதால், உலகம் முழுவதும் பூஸ்டர் டோஸ், நான்காவது டோஸ் என்று அடுத்தடுத்து தடுப்பூசிகள் செலுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இந்தியாவிலும் பூஸ்டர் டோஸ், சிறார்களுக்கான கோவாக்சின் தடுப்பூசி இம்மாதம் முதல் செலுத்தப்படஉள்ளது.
நான்காவது டோஸ் தடுப்பூசி செலுத்தும் முதல் நாடு
உலகின் முதல் நாடாக இஸ்ரேல் நான்காவது டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை நேற்று முதல் தொடங்கியுள்ளது. அந்நாட்டில் உள்ள ஷெபா மருத்துவமனை வளாகத்தில் முன்களப்பணியாளர்களுக்கும், முதியோர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. இதுகுறித்து, அந்நாட்டு அரசு தெரிவிக்கையில், கரோனா தொற்றின் நான்காம் அலை தொடங்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அனைவரும் நான்காவது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவேண்டும்.
அதேபோல பூஸ்டர் தடுப்பூசிகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு டோஸ் செலுத்தியவர்கள் அடுத்தடுத்த டோஸ்களை செலுத்த வேண்டும். கரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நபர்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது. 90 லட்சம் மக்கள் இஸ்ரேலில் உள்ளர். இதில் 65 லட்சம் பேருக்கு ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒமைக்ரானால் பலி... நான்காவது டோஸ் தடுப்பூசி தேவை...