சனிக்கிழமை ஈராக்கிலுள்ள பாக்தாத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி உள்ளிட்ட எட்டு பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்காவின் இந்தச் செயலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவை பழிவாங்குவதற்கு ஈரான் நாடாளுமன்றத்தில் செவ்வாய்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி அமெரிக்க ராணுவ தலைமையிடமான பென்டகன் மற்றும் ராணுவத் தளபதி காசிம் சுலைமானியின் மரணத்துக்கு காரணமான அனைவரையும் பயங்கரவாதிகளாக ஈரான் அறிவித்துள்ளது.
மேலும், தேசிய வளர்ச்சி நிதியிலிருந்து 223 மில்லியன் டாலரை ஈரான் ராணுவத்துக்கு பயன்படுத்தவும் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கான அனுமதியை ஈரான் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனியிடமும் பெற்றுவிட்டதாக ஈரான் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, அமெரிக்காவுக்கு எதிரான முழக்கங்களையும் ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பினர்.
இதையும் படிங்க: அமெரிக்கா - ஈரான் பதற்றமும், இந்தியாவும்!