எகிப்து நாட்டில் கரோனா வைரசின் இரண்டாம் அலை தாக்கிவருவதாக அச்சம் ஏழுந்துள்ளது. வைரஸ் தடுப்புப் பணியில் அரசு தீவிரமாக களமிறங்கியுள்ளது. இதுவரை ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 700 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆறாயிரத்து 832 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொற்று பாதிப்பு அதிகரிப்பதை தொடர்ந்து, சீனாவிடமிருந்து சினோபார்ம் கரோனா தடுப்பூசி மருந்தை இறக்குமதி செய்ய எகிப்து அரசு முடிவுசெய்தது. கெய்ரோவும் அபுதாபியும் நெருக்கமாக உறவை கொண்டுள்ளனர். ஒப்பந்தத்தின்படி, இன்று காலை ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து கெய்ரோவின் சர்வதேச விமான நிலையத்திற்கு மருந்துகள் வந்தடைந்தன.
தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்காக எகிப்தின் சுகாதாரத் துறை அமைச்சர் ஹலா சயீத், மற்றும் சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அலுவலர்கள் விமான நிலையத்திற்கு வருகைதந்தனர்.
சுகாதாரத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கலீத் மெகாஹெட் வெளியிட்ட அறிக்கையில், "சுகாதாரப் பணியாளர்களுக்கு, குறிப்பாக கோவிட் -19 பணியில் ஈடுபட்டவர்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்படும். 21 நாள்கள் இடைவேளியில் அவர்களுக்கு இரண்டு அளவு தடுப்பூசி கிடைக்கப்பெறும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
சினோபார்ம் தடுப்பூசி ஒரு சில நாடுகளில் அவசரகாலப் பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.