ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில், பாரதிய ஜனதா அரசு கடுமையான நடவடிக்கை எடுத்தது. இந்நடவடிக்கைக்கு பாகிஸ்தான் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான், இவ்விவகாரம் தொடர்பாக ஐ.நா. மன்றத்தில் முறையிட்டார். இதையடுத்து அவர், அமெரிக்காவின் முக்கிய தலைவர்களை சந்தித்துப் பேசினார். பின்னர் இம்ரான்கான் தனது மனைவி புஷ்ரா பீவியுடன் சவுதி அரேபியா சென்றார்.
இம்ரான் கானுக்கு தனி விமானம் அனுப்பி சவுதி அரேபியா அரசு கவுரவித்தது. தொடர்ந்து அவர் மெக்கா சென்று வழிபட்டார். சவுதி அரேபியா நாட்டின் முக்கிய தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். இரண்டு நாள்கள் சவுதியில் தங்கியிருந்த இம்ரான் கான், ஜம்மு-காஷ்மீர் விவகாரம் குறித்து முறையிட்டதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மானை, இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் சந்தித்துப் பேசினார். சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பின்போது, ஜம்மு-காஷ்மீர் விவகாரம் குறித்து பேசினார்கள்.
மேலும் இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு உறவுகள் குறித்தும் பேசப்பட்டது. சவுதி அரேபியா நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில், இளவரசர் சல்மான் திட்டம் 2030 என்ற முழக்கத்தை கையில் எடுத்துள்ளார்.
இதனால் இந்தியா, சவுதி இடையே வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளது. பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்த கையோடு அஜீத் தோவல், அந்நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் முசாத் அல் அய்பனையும் சந்தித்தார்.
அப்போது தேசிய மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. அஜீத் தோவல், ஐக்கிய அரபு அமீரக (யு.ஏ.இ.) தலைவர்களையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.