சீனா உள்ளிட்ட நாடுகளில் கோவிட்-19 (கொரோனா வைரஸ்) என்ற வைரஸ் பரவி வருகிறது. குறிப்பாக சீனாவின் ஹூபே மாகாணத்தில் மையம் கொண்டுள்ள இந்த வைரஸ் காரணமாக அந்நாடு முழுவதும் இதுவரை இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக கோவிட்-19 பரவலைத் தடுக்க இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் வேளையில், மத்திய கிழக்கு நாடான ஈரானில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஈரானின் கோம் நகர சுகாதாரத் துறை அலுவலர் மொகமதிரேஸா காதிர் கூறுகையில், "உயிரிழந்த இருவரும் கோம் நகரவாசிகளாவர். நோய்வாய்ப்பட்டு இரண்டு நாள்கள் கழித்தே அவர்கள் எங்களைச் சந்தித்தனர். இருவரும் இதுவரை வெளிநாட்டிற்கே சென்றதில்லை. கோம் நகரில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தி விட்டோம். பொதுமக்கள் அச்சப்பட வேண்டியதில்லை" என்றார்.
கொரோனா வைரஸ் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் நிகழ்ந்த முதல் உயிரிழப்பு இதுவாகும். இதைத்தவிர, ஹாங்காங் (சீனாவின் தன்னாட்சிப் பிராந்தியம்), தைவான், ஜப்பான், பிலிப்பைன்ஸ், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க : கொலம்பியா மாகாண தலைமை நீதிபதியாக இந்தியர் நியமனம்