கடந்த ஆண்டு சீன நாட்டில் தொடங்கிய கரோனா வைரஸ் பெருந்தொற்று 190க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. உலகளவில் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த கொடிய வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இறந்தவர்களின் எண்ணிக்கை 35,000 கடந்துள்ளது.
வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, கனடா அனைத்தும் கரோனாவை கண்டு கலங்கிப்போய் இருக்கும் நிலையில், சில சிறிய நாடுகளில் கரோனா வைரஸ் அடியெடுத்து கூட வைக்கவில்லை என்பது ஆச்சரியம் அளிக்கிறது.
அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் பல ஆயிரக்கணக்கானோர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஆனால் ஆஸ்திரேலியாவின் அருகிலிருக்கும் சிறு சிறு நாடுகளில் இன்னும் ஒருவருக்குக் கூட கரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை.
1.பலாவு (Republic of Palau)
பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவு நாடாகும். இந்நாட்டின் மொத்தப் பரப்பளவு 459 சதுர கிலோ மீட்டர்கள் மட்டும்தான். இந்த நாட்டில் 73 வயதான ஒருவருக்கு கரோனா வைரஸ் அறிகுறி கண்டறியப்பட்டு அவரின் இரத்த, சளி மாதிரிகள் பரிசோதனைக்கு தைவான் நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
பின்பு பரிசோதனையின் முடிவில், அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சிறிய நாட்டில் இதுவரை யாருக்கும் கரோனா பாதிப்பு ஏற்படவில்லை என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
2.தொங்கா (Tonga)
தொங்கா இராச்சியம் (Kingdom of Tonga) என்பது பொலினீசியாவில் அமைந்துள்ள ஓர் இறையாண்மையுள்ள நாடாகும். இது 177 தீவுகளைக் கொண்ட ஒரு தீவுக்கூட்டம் ஆகும். இந்த நாட்டிலும் கரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
3.சாலமன் தீவுகள் (Solomon Islands)
மெலனீசியாவில் பப்புவா நியூ கினிக்குக் கிழக்கே கிட்டத்தட்ட ஆயிரம் தீவுகளைக் கொண்டுள்ள ஒரு தீவு நாடாகும். இந்த நாட்டில் மூன்று பேருக்கு கரோனா வைரஸ் பெருந்தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
பின்பு பரிசோதனை முடிவில் கரோனாவால் மூவரும் பாதிக்கப்படவில்லை என அந்நாட்டு அரசாங்க அலுவலர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
4.பார்படாஸ் (Barbados)
பார்படாஸ் அதிக மக்கள் தொகை மற்றும் வளமான கரீபியன் தீவுகளில் ஒன்றாகும். இந்த தீவு நாட்டிலும் இதுவரை ஒருவருக்குக்கூட கரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை எனத் தெரிவியவந்துள்ளது.
5.போட்ஸ்வானா (Botswana)
போட்ஸ்வானா குடியரசு என்று முறைப்படி அழைக்கப்படும் போட்ஸ்வானா நாடு முற்றிலும் பிறநாடுகளால் சூழப்பட்ட தென் ஆப்பிரிக்க நாடு ஆகும்.
முன்னர் இந்த நாடு பிரித்தானியப் பாதுகாப்பில் இருந்த பகுதியாகிய பெச்சுவானாலாந்து என்பதாகும். செப்டம்பர் 30, 1966ஆம் ஆண்டு விடுதலை பெற்றபின் போட்ஸ்வானா என்னும் பெயர் பெற்றது. இந்த நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை.
இந்த நாடுகளைத் தவிர சிரியா, மார்ஷல் தீவுகளின் குடியரசு, பிஜி போன்ற நாடுகளிலும் கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : கரோனா பாதிப்பால் பரிதவிக்கும் ஆப்பிரிக்க நாடுகள்