துபாய்: பஹ்ரைன் இளவரசர் கலீபா பின் சல்மான் அல் கலீபா காலமானார். அண்மைக்காலமாக இவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அமெரிக்காவில் உள்ள மாயோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரது உயிர் பிரிந்தது. இதனை பஹ்ரைன் நாட்டின் தேசிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கலீபா, வளைகுடா (கல்ப்) பாரம்பரியத்தை பிரதிபலித்தார்.
இவருக்கு நீண்ட கால பாரம்பரியம் கொண்ட சன்னி அல்- கலீபா குடும்பத்தினரின் ஆதரவு இருந்தது. கலீபா, அல் கலீபா வம்சாவளியை சேர்ந்தவர். இவர்களது முன்னோர்களே ஏறத்தாழ 200 நூற்றாண்டுகளாக பஹ்ரைனை ஆட்சி செய்துவருகின்றனர். கலீபா ஆட்சிக் காலத்தில் பஹ்ரைனில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இவரது மறைவுக்கு அமெரிக்க உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். சல்மான் அல் கலீபாவுக்கு 2015ஆம் ஆண்டிலிருந்தே உடல் நலக் குறைவு இருந்துள்ளது. இதற்காக அவர் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். அண்மையில் கூட ஜெர்மனி சென்று மருத்துவ சிகிச்சை பெற்று திரும்பியுள்ளார்.
மறைந்த சல்மானுக்கு மனைவியும், அலி என்ற மகனும் லுல்வா என்ற மகளும் உள்ளனர். இவரது மற்றொரு மகன் முகம்மது காலஞ்சென்றுவிட்டார். கலீபா மறைவை தொடர்ந்து வியாழக்கிழமை (நவ12) முதல் 3 நாள்களுக்கு பஹ்ரைனில் தேசிய கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப்படுகின்றன.
கலீபாவின் உடல் அடக்கத்தில் குறைந்த அளவிலான குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொள்ள உள்ளனர்.
இதையும் படிங்க: 6 மாதத்திற்குப் பின் கரோனா பாதிப்பை ஒத்துக்கொண்ட இளவரசர்