எல்லா மனிதர்களும் ஒரே மாதிரியான தோற்றத்துடன் பிறப்பதில்லை. சிலர், இயற்கைக்கு மாறாக ஜீன் குறைபாடுகளாலோ அல்லது நோய் குறைபாடுகளுடனோ பிறப்பார்கள். அவ்வாறு பிறப்பவர்களை சில மனிதர்கள் கேலி செய்து, அவர்களைத் தர்ம சங்கட நிலைக்கு உட்படுத்துவார்கள். அவர்களுக்கு தற்கொலை எண்ணம் வரவழைக்கும் அளவிற்கு மிகவும் கீழ்த்தரமாகப் பேசுவார்கள். தாங்கள் ஏன் பிறந்தோம் என அவர்கள் மனதுக்குள் குமுறும் வண்ணம் பேசுபவர்களே இங்கு அதிகம்.
அவ்வாறு பிறப்பவர்களின் நிலையைக் கருத்தில்கொண்டு, குறைகளுடன் பிறப்பவர்களிடம் எந்த அவமானத்தையும் ஏற்படுத்தாமல் சிறு நம்பிக்கையைக் கூட, மனதில் விதைக்க மனிதர்கள் யாரும் தயாராக இல்லை.
ஆனால், அவர்களின் எண்ணத்தில் அவநம்பிக்கை விஷத்தைப் பரப்பி, சிறு மகிழ்ச்சி கூட அவர்களுக்குக் கிடைக்கக் கூடாது என கங்கணம் கட்டிக்கொண்டு அநேகர் உள்ளனர்.
அத்தகையவர்களால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய சிறுவன் ஒருவன் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகக் கூறி, கதறி அழுத காட்சி உலகையை ஒரு நிமிடம் உறைய வைத்தது. தாங்கள் எவ்வளவு கீழ்த்தரமானவர்கள் என்று மனதுக்குள் உரைக்கும் வண்ணம் அந்தச் சிறுவனின் கதறல் எதிரொலித்தது. அந்த எதிரொலிப்பிற்குக் காரணம் ஆனவர் தான், குவாடன்.
ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த பெண் யர்ராகா பேல்ஸ். இவருக்கு குவாடன் என்ற 9 வயது மகன் உள்ளார். மேற்கூறியது போல எலும்புக் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டு, உடல் வளர்ச்சிக் குன்றி காணப்பட்டுள்ளார்.
ஆரம்பத்தில் ஒன்றும் அறியாத குழந்தையாக இருந்தபோது தனக்கு ஏற்பட்ட நோய்ப் பாதிப்பு பற்றித் தெரியாமல் மகிழ்ச்சியாக வளர்ந்த அவருக்கு சிறுவன் வளர வளர அந்த மகிழ்ச்சி, நீண்ட நாள்கள் நீடிக்கவில்லை.
ஆம். பள்ளியில் சேர்ந்த சிறுவனுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்துள்ளது. சிறுவனின் சக மாணவர்கள் குவாடனின் உருவத்தை வைத்து கேலி செய்தனர். சிறு வயதில் மாணவர்களுக்குச் சொர்க்கமாகத் தெரியும் பள்ளிக்கூடம், குவாடனுக்கோ நரகமாகத் தெரிந்துள்ளது. ஒவ்வொரு நாளும் பல இன்னல்கள், கேலிகள் என சக மாணவர்கள் அவரை நிலைகுலைய வைத்துள்ளனர்.
சிறுகச்சிறுக அவர் மனதில் தேங்கிய அவநம்பிக்கையும் அழுத்தமும் ஒருகட்டத்திற்கு மேல் தற்கொலை எண்ணத்திற்கு இட்டுச் சென்றுள்ளது. மன அழுத்தம் அதிகரித்து, தாளாமல் தன் தாயிடம் தினமும் கூறி, கதறி அழுதுள்ளார்.
இதனால் மனமுடைந்த அவரது தாயார், ஒருநாள் குவாடன் தற்கொலை செய்துகொள்ள, அவரிடம் கயிறு கேட்டுக் கதறி அழுததை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். உருவக்கேலிக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், தன்னுடைய மகனின் நிலையை உலகிற்கு அறியச் செய்யும் விதமாகவும் அந்த காணொலியை சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார்.
'யாராவது என்னைக் கொன்றுவிடுங்கள். இல்லையென்றால், கயிறு கொடுங்கள். நான் தற்கொலை செய்துகொள்கிறேன்' என்று சிறுவன் கதறி அழுத வீடியோ அனைவரின் மனதையும் உலுக்கியது. காணொலி பதிவிட்ட சில நிமிடங்களிலேயே உலகளவில் ட்ரெண்டானது. லட்சக்கணக்கானோர் அதனை ஷேர் செய்து சிறுவனுக்கும் அவரது தாயாருக்கும் ஆறுதல் வார்த்தைகளில் நம்பிக்கை மழை பொழியச்செய்து, நனைய வைத்தனர்.
பலரும் சிறுவனின் நிலைக்குத் தாங்கள் வருந்துவதாகவும், இதேபோன்று யாரையும் உருவக்கேலி செய்ய மாட்டோம் எனவும் கூறி, தங்களின் வருத்தத்தைப் பதிவுசெய்தனர். சினிமா பிரபலங்கள், திரைப் பிரபலங்கள் என அனைவரும் இதுதொடர்பாக கருத்து தெரிவிக்க, உலகளவில் #Istandwithquaden என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது.
ஆதரவு ஒருபுறம் குவிய சிறுவனுக்குச் சிலர் ஆனந்த பரிசுகளையும் வழங்கி வருகின்றனர். அந்த வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டண்ட் அப் காமெடியன் பிராட் வில்லியம்ஸ், சிறுவனையும் அவரது தாயாரையும் உலகில் அனைவரும் ஒருமுறையாவது சென்று பார்த்துவிட வேண்டும் என நினைக்கும் டிஸ்னி லேண்ட்க்குச் செல்ல வழிவகை செய்துள்ளார். அதற்காக மக்களிடம் அவர் நிதி திரட்டிவருகிறார். இதுவரை 6,500 பேர் சேர்ந்து 1 லட்சத்து 50 ஆயிரம் டாலர்கள் நிதி கொடுத்துள்ளனர்.
இந்தச் சூழலில் ஆஸ்திரேலிய தேசிய ரக்பி லீக் அணி வீரர்கள் குவாடனுக்கு ஆதரவாகப் பேசி, அணியின் ட்விட்டர் பக்கத்தில் காணொலி வெளியிட்டனர். ரக்பி விளையாடும் மைதானத்திற்கு குவாடனை அழைத்துச் சென்று கௌரவப்படுத்த விரும்புவதாக அதில் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதுபோலவே, குவாடனை, ரக்பி வீரர்கள் ராஜநடை போட்டு வீரர்களின் அறைக்குள் இருந்து மைதானத்துக்குள் அழைத்து வந்தனர்.
குவாடன் தன் கையில் ரக்பி பந்துடன் மைதானத்தை கெத்தாக வலம் வந்த காட்சி, அவரை மட்டுமல்லாமல் அவருக்கு ஆதரவாக மனமிறங்கிய அனைவருக்கும் பேருவுவகையை உண்டாக்கியது என்று சொன்னால் அது மிகையாகாது. நேற்று வரை குவாடனை கேலி செய்த வாய்கள், இன்று கொண்டாடத் தொடங்கியுள்ளன. ’நான் ராஜா... நான் ராஜா...' என்று கெத்தாக குவாடன் நடந்துவரும் புகைப்படம் அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொண்டுள்ளது.
இதையும் படிங்க: 'யாராவது என்னைக் கொல்லுங்க' - உலகை உலுக்கிய சிறுவனின் வீடியோ...