ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு மாகாணங்களில் ஒன்றான பக்ஹ்லான் தலைநகர் புலி கும்ரியில், இன்று நள்ளிரவு சுமார் ஒன்றரை மணியளவில் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். நகரின் மையப் பகுதிக்கு அருகேயுள்ள பந்த்-இ-தொ, திவார்-இ-மதான் பகுதிகளில் தலிபான்கள் தங்களது தாக்குதலை தொடங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, அந்நாட்டின் வட மாகாணங்களை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையில் உள்ள குண்டூஸ் நகர் மீது தலிபான்கள் சனிக்கிழமை நள்ளிரவுத் தாக்குதலை அரங்கேற்றி, அங்குள்ள அரசு கட்டடங்களை ஒவ்வொன்றாகக் கைப்பற்றினர். இதில், 10-க்கும் மேற்பட்ட அரசு பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து தலிபான்களுடன் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது. இதுகுறித்து ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க சிறப்புத் தூதர் ஸால்மே காலிஸாத் இன்று காலை நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
இதனிடையே, இந்தத் தாக்குதல்கள் தலிபான்களால் அரங்கேறியுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.