பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார் .
அப்போது ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து பேசிய ட்ரம்ப், "ஆப்கானிஸ்தானில் நாங்கள் போர் புரிந்தால், ஒரு வாரத்துக்குள் அந்த போரில் வென்றுவிடுவோம். ஆனால், போரில் ஒரு கோடிக்கும் மேலானோர் பலியாவார்கள் என்பதால் அதனை நான் விரும்பவில்லை.
போரில் நாங்கள் வெற்றிபெற்றால், வெறும் 10 நாட்களுக்குள் ஆப்கானிஸ்தான் இருந்ததற்குத் தடயமே இல்லாமல் அழிந்துவிடும்" எனத் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப்பின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஆப்கானிஸ்தான் அரசு, அது தொடர்பாக அவர் தகுந்த விளக்கைத்தை அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆப்கானிஸ்தானின் தலையெழுத்தை எந்த அந்நிய நாட்டுத் தலைவர்களும் முடிவெடுக்க முடியாது. உலக அரசியல் அரங்கில் ஆப்கானிஸ்தான் கண்ணியமாகவும், திடமாகவும் தொடர்ந்து செயல்படும்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடனான சந்திப்பின் போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியது தொடர்பாக அவர் தக்க பதிலளிக்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.