ஈராக் தலைநகர் பாக்தாத்திலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அல்-தாஜ் கேம்ப் எனும் ராணுவ தளம் அமைந்துள்ளது. இங்கு அமெரிக்கா உள்ளிட்ட அந்திய ராணுவப் படையினர் முகாமிட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த ராணுவ தளம் மீது நேற்று (13-06-2020) மாலை, கட்யூஷா வகையைச் சேர்ந்த இரண்டு ஏவுகணைகளைக் கொண்டு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக ஈராக்கிய கூட்டுப் படை தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளம், அமெரிக்கத் தூதரகம் ஆகியவற்றின்மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படுவது வழக்கமானதே ஆகும். ஈராக்கில் நிலவி வரும் பாதுகாப்பு சூழல் குறித்து கடந்த புதன்கிழமை, ஈராக் - அமெரிக்கா அலுவலர்கள் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்ட நிலையில், இந்தத் தாக்குதல் தற்போது அரங்கேறியுள்ளது.
பாக்தாத் விமான நிலையத்தில் கடந்த ஜனவரி மாதம் மூன்றாம் தேதி அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில், ஈரானிய தளபதியும், அந்நாட்டின் போர் நாயகனுமான காதிம் சுலைமானி கொல்லப்பட்டார். இது ஈராக்கை கடும் கோபத்துக்கு ஆளாக்கியது.
இதையடுத்து, ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படையினரை திரும்பப் பெற அமெரிக்காவை வலியுறுத்தி ஈராக் நாடாளுமன்றத்தில் ஜனவரி ஐந்தாம் தேதி ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டும் நோக்கில், தற்போது ஐந்தாயிரத்துக்கும் அதிகமான அமெரிக்கப் படையினர் ஈராக்கில் முகாமிட்டு அந்நாட்டு ராணுவத்தினருக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : அட்லான்டாவில் ஆப்ரிக்க அமெரிக்கர் ஒருவர் சுட்டுக்கொலை: காவல் துறை தலைவர் ரிசைன்!