ஈரான் நாட்டின் தெஹ்ரானின் வடக்கு மலை பகுதியில் மலையை ஏறி சிகரத்தின் உச்சியை தொடும் உற்சாகத்தை அனுபவிப்பதற்காக, உள்நாட்டினர் மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த மலையேற்றக் குழுவினரும் அதிகம் விரும்பி வருவதுண்டு.
ஆனால் இம்மலை பகுதியில் அடிக்கடி பனிப்புயல் வீசுவதுண்டு. இந்நிலையில், கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி கோலாச்சல், அஹார் மற்றும் தாராபாத் ஆகிய மூன்று மாவட்டங்களில் கடுமையான பனிப்புயல் ஏற்பட்டது. இப்பனிப்புயலில் மலையேற்றக் குழுவைச் சேர்ந்தவர்கள் சிக்கி உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சி மீட்புக் குழுவினர் தேடுதலில் ஈடுபட்டனர்.
மூன்று நாட்கள் நடந்த இந்தத் தேடுதலில் தலைநகரின் வடக்கு மலை பகுதியில் பனிப்புயலில் சிக்கிய உயிரிழந்த 11 பேரின் உடலை மீட்டனர். அதேபோல் கோலாச்சல் மாவட்டத்தில் ஒருவரது உடலையும் மீட்டனர். உயிரிழந்தவர்கள் மலையேற பயன்படுத்திய உபகரணங்கள் சில மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
தேடுதல் பணி தொடர்ந்து நடைபெறுவதால், உயிரிழப்புகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.