உலகளவில் மேற்கொள்ளப்படும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் செய்தியாளர்களிடம் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். அதில் கரோனா பாதிப்பை சிறப்பாக எதிர்கொண்ட பகுதிகளுக்கு பாராட்டுத் தெரிவித்தார்.
அதன்படி, உலகின் சில பகுதிகள் கரோனாவின் தீவிர தாக்கத்தை முறையான நடவடிக்கைகள் மூலம் கடந்து வந்துள்ளன எனவும்; அவற்றை மற்ற பகுதிகளும் முறையாகப் பின்பற்றினால் கரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும் எனவும் அவர் கூறினார்.
இத்தாலி, ஸ்பெயின், தென்கொரியா போன்ற நாடுகள் இதற்கு நல்ல உதாரணம் எனத் தெரிவித்த டெட்ரோஸ், 'மக்கள் தொகை நெருக்கம் அதிகம் கொண்ட பகுதியான மும்பையின் தாராவி கரோனாவை சிறப்பாக கையாண்டுள்ளது' என்றார்.
முறையான பரிசோதனை, தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட செயல்பாடுகளால் மேற்கொண்ட பகுதிகள் வைரஸ் பரவலைத் தடுத்துள்ளன எனத் தெரிவித்துள்ளார். மேலும், உலக நாடுகள் ஒற்றுமையுடன் இந்த பிரச்னையைக் கையாள்வதே வெற்றிக்கான வழி என டெட்ரோஸ் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் தொகை நெருக்கம் அதிகமுள்ள தாராவிப் பகுதியில் தொடக்க காலத்தில், கரோனா பரவல் தீவிரமாகக் காணப்பட்டு வந்த நிலையில், தற்போது நாளொன்றுக்கு ஒற்றை இலக்க எண்ணில்தான் பாதிப்பு பதிவாகிறது.
உலக சுகாதார அமைப்பின் தலைவர் தாராவிக்கு அளித்துள்ள இந்தப் பாராட்டு நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: சீன அரசுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தை நாடும் உய்கர் மக்கள்