கரோனாவுக்கு எதிரான போரில், தடுப்பூசி முக்கியப் பங்கு வகிக்கிறது. உலக அளவில் தடுப்பூசி விநியோகம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளில் குடிமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால், ஏழை நாடுகளுக்கு கரோனா தடுப்பூசி கிடைப்பதில் சிக்கல் உள்ளதால், அவர்களுக்கும் தடுப்பூசி சென்றடைய வேண்டும் என்பதற்காக ’கோவாக்ஸ்’ என்ற திட்டத்தை உலக சுகாதார அமைப்பு உருவாக்கியது. அதன் மூலம், தடுப்பூசிகளை நன்கொடையாகப் பெற்று அனுப்பி வந்தது.
இந்நிலையில், இது குறித்துப் பேசியுள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், " தற்போது வரை 194 நாடுகளில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. சில நாடுகளில் விரைவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கவுள்ளது. கோவாக்ஸ் திட்டத்தின் மூலம் கடந்த ஆறு வாரங்களில் 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 30 மில்லியன் டோஸ் கரோனா தடுப்பூசி அனுப்பப்பட்டுள்ளது. மார்ச் மாத இறுதிக்குள் 100 மில்லியன் டோஸ் தடுப்பூசி அனுப்புவதை இலக்காக வைத்திருந்தோம் ஆனால், தடுப்பூசி உற்பத்தியில் தாமதம் ஏற்பட்டதால், எங்களால் இலக்கை எட்ட முடியவில்லை.
மேலும், உலக அளவில் நிர்வகிக்கப்படும் 700 மில்லியனுக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகளில் 80 விழுக்காட்டிற்கு அதிகமான அளவில் பணக்கார நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. பணக்கார நாடுகளில் நான்கு பேரில் ஒருவர் தடுப்பூசியையோ அல்லது குறைந்தபட்சம் ஒரு டோஸையோ பெற்றுள்ளார். ஆனால் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் 500 பேரில் ஒருவருக்கு மட்டுமே தடுப்பூசி கிடைத்துள்ளது. தடுப்பூசிகளின் உலக அளவிலான விநியோகத்தில் அதிர்ச்சியூட்டும் ஏற்றத்தாழ்வு உள்ளது.
அதே போல, சில நாடுகள் அரசியல் காரணங்களுக்காகவும், வணிகக் காரணங்களுக்காகவும் கோவாக்ஸ் திட்டத்தைப் புறக்கணித்துவிட்டு, சொந்த தடுப்பூசியை தயாரித்து விநியோகிக்கத் திட்டமிடுகின்றனர். கரோனா விஷயத்தில் உலக நாடுகளின் அலட்சியம், பெரும் தீங்கை விளைவிக்கும்" என எச்சரித்தார்.
இதையும் படிங்க: 'அலிபாபா'வுக்கு 280 கோடி ரூபாய் அபராதம்: காரணம் என்ன?