சீனாவின் வூஹானில் நகரில் தோன்றிய கோவிட்-19 பெருந்தொற்று, உலகம் முழுவதும் பரவி பெரும் பேரிடராக உருவெடுத்துள்ளது. மற்ற வைரஸ் நோய்களை விட, அதி வேகமாகப் பரவும் கோவிட்-19 ஐை கட்டுப்படுத்த உலகின் பெரும்பாலான நாடுகளில் தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, முடங்கிக் கிடக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க உலக நாடுகள் இம்மாத தொடக்கத்திலிருந்தே ஊரடங்கை படிப்படியாகத் தளர்த்தி வழக்கமான பணிகளில் ஈடுபட்டுவருகின்றன. இதனால், கோவிட்-19 தாக்கத்தின் தீவிரம், மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் எச்சரிக்கிறார்.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் வருடாந்திர கூட்டத்தில் பேசிய அவர், "இந்தப் பிரச்னையை எளிமையாகத் தீர்த்துவிட முடியாது. ஒரே வழிமுறையை அனைத்து நாடுகளும் பின்பற்றவும் முடியாது. இதிலிருந்து மீண்டு வர அறிவியல், அனுபவத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். நிலைமைக்கு ஏற்றார்போல வளைந்து கொடுக்க வேண்டும்.
ஒத்துழைப்பினால் என்னவெல்லாம் நன்மை கிடைக்கும் என்பதையும், ஒத்துழைப்பு இல்லை என்றால் என்னவெல்லாம் இழக்க நேரிடும் என்பதையும் இந்தப் பேரிடர் நமக்குக் கற்றுக்கொடுத்துள்ளது.
பேரிடரைச் சமாளிக்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யாமல் உலக நாடுகள் முன்கூட்டியே ஊரடங்கை தளர்த்தினால், கோவிட்-19 தாக்கம் மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் உலக சுகாதார அமைப்புக்கு உலக நாடுகள் ஆதரவளிக்க வேண்டும்.
இப்பேரிடரை எதிர்கொள்ள நம்மிடம் அனைத்து வகையான கருவிகளும், அறிவியலும் உள்ளது. ஆனால், இவற்றை நாம் சரியாகப் பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும். இந்த மாற்றம் இன்றே நிகழ வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க : மாணவி எரித்துக்கொல்லப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கு தள்ளுபடி!