இங்கிலாந்தின் இளவரசர் வில்லியம்- கேத்தரீன் மிடில்டனின் இரண்டாவது மகளான இளவரசி சார்லோட், தனது ஐந்தாவது பிறந்த நாளைக் சனிக்கிழமை (மே2) கொண்டாடும் நிலையில் கரோனா நெருக்கடியில் இருப்பவர்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கினார்.
இங்கிலாந்திலுள்ள செயின்ட் மேரி மருத்துவமனையில், 2015ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் தேதி இளவரசி சார்லோட் பிறந்தார். தற்போது அவரின் புகைப்படங்கள் இணையம், சமூக வலைத்தளத்தை ஆக்கிரமித்து கிடக்கிறது.
இந்த நான்கு புகைப்படங்களும் ஏப்ரல் மாதத்தில் அவரது தாயார், டச்சஸ் ஆஃப் கேம்பிரிட்ஜ் அமெச்சூர் புகைப்படக் கலைஞரால் எடுக்கப்பட்டதாக இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தப் புகைப்படங்களை ராயல் ஃபோட்டோகிராஃபிக் சொசைட்டியின் புரவலரான டச்சஸ், ஜார்ஜ், மற்றும் லூயிஸ் இருவரும், சார்லோட் பிறந்தநாளில் வெளியிட்டுள்ளனர்.
சார்லோட் தனது பெற்றோருடன் இணைந்து நிவாரணப் பொருள்களை வழங்குகிறார். மற்றொரு படத்தில் தனது சகோதரனும் இளவரசனுமான ஜார்ஜ் மற்றும் இளவரசர் லூயிஸ் ஆகியோருடன் சேர்ந்து பொருள்களை வழங்குகிறார்.
வெள்ளிக்கிழமை (மே1) இரவு வெளியிடப்பட்ட இந்த புகைப்படங்களில், வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் வகையில் வீட்டில் இருக்கும் வயதானவர்களுக்கும் பிற பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்காகவும் அவர் வெள்ளை நிற உணவு பொட்டலத்தை கொண்டு செல்வதை பார்க்க முடிகிறது.
இதற்கிடையில் அரச குடும்பத்தினர் பல மணி நேரம் செலவிட்டு பாஸ்தாவை சமைத்ததாக செய்தி நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஐந்து வாரங்களாக, குயின்ஸ் சாண்ட்ரிங்ஹாம் ஊழியர்கள் ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் உள்ளூர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு உணவு தயாரித்து வழங்கி வருவதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. முதல் வாரத்தில் மட்டும் சுமார் ஆயிரம் பேருக்கு உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.