உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. நூற்றுக்கணக்கான மருந்துகள் பரிசோதனை கட்டத்தில் உள்ளன. தினம்தோறும் இரண்டரை லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் நேற்று (செப்டம்பர் 16) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அதில், கரோனா தொற்றால் நாம் உலகளாவிய பாதுகாப்பு அச்சுறுத்தலில் முதலிடத்தில் உள்ளோம். வைரஸை தோற்கடிக்க சர்வதேச சமூகம் ஒன்றிணைய வேண்டிய தருணம் இதுதான். பலர் தடுப்பூசி மருந்தை நம்பி உள்ளனர். ஆனால், நினைவுகொள்ளுங்கள் ஒரு தடுப்பூசியால் மட்டுமே இந்த நெருக்கடியை தீர்க்க முடியாது. கரோனா சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் கருவிகளை நாம் மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். உயிர்களை காப்பாற்ற முக்கியமாக அடுத்த 12 மாதங்களுக்கு செய்திட வேண்டும்" என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "கரோனா தடுப்பூசியை உலக பொது நன்மையாக பார்க்கவேண்டும். ஏனென்றால் கரோனாவிற்கு எல்லைகள் கிடையாது. அனைவருக்கும் மலிவான விலையில் தடுப்பூசி கிடைத்திட வேண்டும். எந்தவொரு தடுப்பூசியும் வேலை செய்ய, உலகெங்கிலும் உள்ள மக்கள் அதை பயன்படுத்த தயாராக இருக்க வேண்டும். தடுப்பூசிகளால் பக்கவிளைவுகள் ஏற்படும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உள்ளது. இந்த ஆபத்தான நோயை எதிர்கொள்ளும் போது, தவறான தகவல்களைத் தடுக்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்.