உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா பிப்ரவரி 24ஆம் தேதிமுதல் போரை நிகழ்த்திவருகிறது. நான்காம் நாளான நேற்றும் (பிப்ரவரி 27) தாக்குதலைத் தொடர்ந்த ரஷ்யா, உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்வைக் கைப்பற்றியதாகக் கூறப்பட்டது. மேலும், தலைநகர் கீவ்வின் பல இடங்களில் வெடிகுண்டு சத்தமும் கேட்கப்பட்டது.
இதையடுத்து, உக்ரைனுடன் பெலாரஸ் நாட்டில் வைத்து அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயார் என ரஷ்யா அறிவித்தது. ஆனால், பெலாரஸ் - உக்ரைன் எல்லையில் ரஷ்ய படைகள் ஊடுருவ வாய்ப்பு உள்ளதால், அங்குப் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் மறுத்துவிட்டது.
இருப்பினும், உக்ரைன் குழுவினர் பெலாரஸ் எல்லைக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தி, அது முடிவடையும் வரை அந்நாட்டில் நிறுத்தப்பட்டிருக்கும் ரஷ்ய போர் விமானங்கள், ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்படாது என பெலாரஸ் வாக்குறுதி அளித்ததை அடுத்து, உக்ரைன் குழுவினர் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டனர்.
நன்றி உணர்ச்சியின் வெளிப்பாடு
இந்தப் பேச்சுவார்த்தை பெலாரஸ் எல்லையில், எங்கு, எப்போது நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ரஷ்ய படையினரின் தாக்குதலால் உருகுலைந்துள்ள உக்ரைன், தனது பாதுகாப்புப் படையினருக்கு சம்பள உயர்வு அளித்து உத்தரவிட்டுள்ளது. இது குறித்து, அந்நாட்டு அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கி கூறுகையில், நாட்டிற்குச் சேவையாற்றும் ராணுவப் படையினருக்கு ஒரு மாதச் சம்பளம் 3,400 டாலர் (சுமார் ரூ. 2.5 லட்சம்) அளிக்கப்படும் என்றார்.
இதற்கு முன்னர், அவர்களுக்கு மாதத்திற்கு 340 டாலர்தான் சம்பளமாக வழங்கப்பட்டது. உக்ரைன், ராணுவ வீரர்களின் சேவைக்கு எவ்வளவு நன்றியுணர்ச்சியோடு இருக்கிறது என்பதை வெளிக்காட்டவே இந்த உயர்வு அளிக்கப்பட்டுள்ளது என அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.
இருதுருவ காட்சிகள்
ரஷ்ய - உக்ரைன் போரினால் ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சை அடைந்துவருகின்றனர். உக்ரைனின் அண்டை நாடான போலாந்தின் எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் கூறுகையில், நேற்று (பிப்ரவரி 27) மட்டும் ஏறத்தாழ 22,000 மக்கள் உக்ரைனிலிருந்து போலாந்திற்கு வந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளனர்.
கூடவே, ஐரேப்பாவின் பல நாடுகளில் இருக்கும் உக்ரைன் மக்கள், தங்கள் தாய் நாட்டிற்காகப் போர்புரிய உக்ரைன் வந்துகொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பேச்சுவார்த்தைக்குத் தயார்... ஆனால், நிபந்தனையை முன்வைத்த உக்ரைன் அதிபர்