ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இருந்த பிரிட்டன், அதிலிருந்து வெளியேற முடிவு செய்தது. அதற்காக 2016ஆம் ஆண்டு பொது வாக்கெடுப்பு நடந்தது. இதற்கு 51 விழுக்காடு மக்கள் ஆதரவு தெரிவித்தனர்.
இந்த நிலையில், எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தீர்மானத்தின்படி செப்டம்பர் 4ஆம் தேதி, பிரெக்ஸிட் அவசரக் கூட்டத்தொடர் கூடியது. காரசாரமான விவாதத்தைத் தொடர்ந்து, ஒப்பந்தமில்லா பிரெக்ஸிட்டை தடுக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு 327 எம்.பி.க்கள் ஆதரவாகவும் 299 எம்.பி.க்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதையடுத்து, அக்டோபர் 15ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று பிரிட்டனில் தேர்தல் நடத்த பிரதமர் போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் செய்தார்.
பெரும் சலசலப்புக்கு இடையே இந்த தீர்மானத்திற்கு 298 பேர் ஆதரவாகவும் 56 பேர் எதிராகவும் வாக்களித்தனர். எனினும், பிரிட்டன் நாடாளுமன்ற சட்டப்படி (Fixed-term Parliaments Act, 2011) பெரும்பான்மை இலக்கை எட்டத் தவறியதால் இந்த மசோதா தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி, பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகப் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்தார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும். அதன்பின் மக்களின் பிரச்னைகள் குறித்து நாம் கவனம் செலுத்தலாம்" என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், தற்போது பிரெக்ஸிட் ஒப்பந்தம் மீண்டும் தள்ளிப்போகிறது. இது தொடர்பான ஓட்டெடுப்பு நாடாளுமன்றத்தில் இன்று நடந்தது. அப்போது பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒப்பந்தத்தை ஒத்திவைக்க வாக்களித்துள்ளனர்.
ஒத்திவைப்பு தீர்மானத்துக்கு ஆதரவாக 322 வாக்குகளும் எதிராக 306 வாக்குகளும் கிடைத்துள்ளன. இதனால் பிரெக்ஸிட் ஒப்பந்தம் மீண்டும் தள்ளிப்போவது உறுதியாகியுள்ளது. இது பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பலத்த அடியாகும்.
இதையும் படிக்க: இரு பிரதமர்களைக் காவு வாங்கிய #Brexit-ல் உடன்பாடு