லண்டன்: பல ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டின் கோயிலில் இருந்து திருடப்பட்ட ராமர், சீதை, லட்சுமணர் ஆகிய இந்துக்கடவுள்களின் மூன்று சிலைகளின் தொகுப்பு லண்டனில் கண்டுபிடிக்கப்பட்டு இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் 1978ஆம் ஆண்டு திருடுபோன இச்சிலைகளை, தமிழ்நாடு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர், லண்டன் நகர காவல் துறையினரின் உதவியுடன் மீட்டுள்ளனர். நல்ல நோக்கத்துக்காகவும், இந்திய கலாசாரத்தின் மீது அதீத காதல் கொண்டும் இச்சிலைகளை வாங்கிய கலை ஆர்வலர் ஒருவரிடம் லண்டன் காவல் துறையினர் சிலை திருட்டு குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளனர்.
பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் ஆப் பாண்டிச்சேரியில் (French Institute of Pondicherry) 1950களிலுள்ள காப்பக புகைப்படங்களுடன் அவரிடம் உள்ள சிலைகளின் புகைப்படத்தைப் பொருத்திப் பார்த்த பின்னர், கலை ஆர்வலர் வசம் உள்ள சிலைகள் விஜயநகர காலத்தைச் சேர்ந்தவை என்பதும், தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டம், அனந்தமங்கலத்தில் உள்ள ஸ்ரீ ராஜகோபாலசாமி கோயிலில் இருந்து திருடப்பட்டதும் தெரிய வந்தது.
கோவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக லண்டனில் உள்ள முருகன் கோயிலின் பூசாரிகள், இந்த சிலைகளை இந்திய அரசிடம் கொடுக்கும் நிகழ்வை காணொலிக் காட்சி வாயிலாக, சிறிய பிரார்த்தனைகளுடன் நடத்தினர்.
'புனித விக்கிரகங்களின் பல ஆண்டு தேடலும், மீட்பும் வெற்றிகரமாக முடிந்துள்ளது. இச்சிலைகளை தக்க மரியாதையுடன் இந்தியாவுக்கு அனுப்புவதை நினைத்துப் பெருமிதம் கொள்கிறோம்' என்று இந்தியத் தூதரக உயர் அலுவலர் கைத்ரி இசார் குமார் தெரிவித்துள்ளார்.
மெய்நிகர் நிகழ்வில் பேசிய தமிழ்நாடு அரசின் சிலைக் கடத்தல் பிரிவு அலுவலர்கள், 'சிலை மீட்புக்கு தன்னார்வ தலையீட்டைப் பாராட்டியதோடு, இச்சிலையை வைத்திருந்த, இந்திய கலாசார விரும்பியான லண்டன் ஆட்சியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது' என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினர்.
டெல்லியில் இருந்து இந்த நிகழ்வில் பங்கேற்ற கலாசார மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் பிரஹ்லாத் சிங் படேல், சிலைகளை திருப்பி அனுப்புவதை வரவேற்றார். மேலும், 2014 முதல் இந்தியாவுக்கு மீட்டெடுக்கப்பட்ட 40க்கும் மேற்பட்ட "விலைமதிப்பற்ற" திருடப்பட்ட கலைப்பொருட்களில் இதுவும் ஒன்றாகும் என்று அவர் கூறினார்.
இந்தியாவிலுள்ள மற்றொரு சிலையைத் திருப்பி அனுப்புவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்திய தொல்பொருள் ஆய்வு மையமும் (ஏ.எஸ்.ஐ), பிற நிபுணர்களின் ஆவணங்களும் லண்டன் அருங்காட்சியகத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் அமைச்சர் அந்நிகழ்வில் வெளிப்படுத்தினார்.
இதையும் படிங்க: கிபி 8ஆம் நுாற்றாண்டு விஷ்ணு சிலை கண்டுபிடிப்பு!