லண்டன்: பிரான்சில் கடந்த சில வாரங்களாக பயங்கரவாதத் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இந்நிலையில், தற்போது ஆஸ்திரியாவின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் பயங்கரவாதத் தாக்குதல்கள் இரண்டாம் அலையை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக இங்கிலாந்து உள்துறை செயலர் ப்ரீத்தி படேல் கூறுகையில், பிரான்ஸில் பயங்கரவாதத் தாக்குதல் அதிகரித்ததையடுத்து, தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது எதிர்பாராதவிதமாக ஆஸ்திரியாவில் தற்போது தாக்குதல் நடைபெற்றுள்ளது.
மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நாடு முழுவதும் காவல் துறையின் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் ஆசிரியர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சமயத்திலேயே நாம் அனைவரும் மிகவும் பயங்கரமான அச்சுறுத்தல்களை சந்திக்கவுள்ளோம் எனத் தெரிவித்திருந்தேன்.
வியன்னாவில் நடைபெற்ற தாக்குதலில் தற்போதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த வாரத்தில் மூன்று பேர் கத்தியால் தாக்கியதில் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் கடுமையான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து மக்களுக்காக நாங்கள் செயல்படுவோம் என அவர் தெரிவித்தார்.