லண்டன்: 2013ஆம் ஆண்டு லண்டனைச் சேர்ந்த 9 வயது பள்ளி மாணவி எலா கிஸ்ஸி டெட்ரா ஆஸ்துமா காரணமாக உயிரிழந்தார். மருத்துவமனை அறிக்கையின் படி அவரது மரணத்திற்கு கடுமையான சுவாசக் கோளாறு, ஆஸ்துமா மற்றும் காற்று மாசுபாடு ஆகியவை தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இவரது மரண வழக்கில் உயிரிழந்த மாணவி ஆஸ்துமாவினால் இறந்தார் எனவும், அதற்கு முக்கிய காரணமாக இருந்தது காற்று மாசுபாடு எனவும் இங்கிலாந்து நீதிமன்றம் இன்று (டிசம்பர் 17) தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, லண்டன் மேயர் சாதிக் கான் தனது ட்விட்டர் பதிவில், "காற்று மாசுபாடு ஒரு பொது சுகாதார நெருக்கடியாக உள்ளது. இன்று 9 வயது எலா கிஸ்ஸி டெப்ராவின் மரணத்திற்கு காற்று மாசு ஒரு பங்கைக் கொண்டிருந்தது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எலாவின் குடும்பத்தைப் போலவே வேறு யாரும், இதுபோன்ற துயருக்கு ஆளாகாதபடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கடந்த காலங்களில் இதுகுறித்த செயல்பாடுகளில் கவனம் செலுத்தவில்லை எனினும், கரோனா அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டாவது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். இவை லண்டனுக்கான தீர்ப்பு மட்டுமல்ல. அனைத்து உலக நாடுகளுக்குமானது" என்றார்.
இதையும் படிங்க: டெல்லியில் மோசமடையும் காற்று மாசு - மத்திய அமைச்சர் வேதனை!