சீனாவில் வூஹான் நகரில் சென்ற ஆண்டு டிசம்பரில் கண்டறியப்பட்ட கோவிட்-19 வைரஸ், தற்போது உலகம் முழுவதும் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.
நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் இந்த நோயை முழுமையாகத் தடுத்து நிறுத்த, தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் பல ஆய்வு நிறுவனங்களும் முன்னணி பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் களமிறங்கியுள்ளன.
உலக்ம் முழுவதும் ஏற்கனவே பல தடுப்பு மருந்துகள் மனிதர்கள் மீது பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில் ஏதாவது ஒன்று வெற்றிபெற்றால்கூட, கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போரில் நமக்கு பெரும் உதவியாக அமையும்.
அந்த வகையில், லண்டன் இம்பீரியல் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய புதிய தடுப்பு மருந்து இந்த வாரம் மனிதர்கள் மீது பரிசோதிக்கப்படவுள்ளது.
இது குறித்து அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "இம்பீரியல் கல்லூரி உருவாக்கியுள்ள தடுப்பு மருந்து, 300 ஆரோக்கியமான நபர்களின் உடலில் இரண்டு முறை செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட உள்ளது" எனத் தெரிவித்துள்ளது.
ஆய்வின் தலைவர் ராபின் ஷாட்டோக் பேசுகையில், "தேசிய சுகாதார நிறுவனம், மாடெர்னா நிறுவனம் இணைந்து உருவாக்கியுள்ள தடுப்பு மருந்துகளைக் காட்டிலும், இந்த மருந்தை சிறிய அளவில் செலுத்தினாலே போதும், திறம்பட வேலை செய்யும். மக்கள் பயன்பாட்டிற்கு அதிக அளவில் தடுப்பு மருந்து தயாரிக்கும் வசதிகள் எங்களிடம் உள்ளன" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த தடுப்பு மருந்தை உருவாக்க, பிரிட்டன் அரசு 388 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இந்தியாவில் ரூ.5 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் சீனா!