லண்டன்: கரோனா வைரஸ் பரவலைக் கருத்தில் கொண்டு, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், அத்தியாவசியமற்ற சர்வதேச பயணங்களுக்கு குறைந்தபட்சம் மே 17ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக அறிவித்தார். உருமாறிய கரோனா வைரஸின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், "மக்கள் அனைவரும் கோடை கால பயணங்களை திட்டமிட்டு வருவதை அறிவேன். இருப்பினும், கரோனா காலத்தைக் கருத்தில் கொண்டு குறைந்தபட்சம் வரும் மே மாதம் 17ஆம் தேதி வரையில் அத்தியாவசியமற்ற சர்வதேச பயணங்களைத் தவிருங்கள். கரோனா பரவலின் காரணமாக விமான போக்குவரத்துத் துறைகள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றன. இதனைக் கருத்தில் கொண்டும், மக்கள் கோடை விடுமுறைகளைக் கொண்டாடுவதைக் கருத்தில் கொண்டும் வரும் ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி மக்கள் எப்போது பயணங்களைத் தொடங்கலாம் என்பது குறித்த அறிவிப்பை அரசு வெளியிடும்" என்றார்.
அரசின் இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த பிரிட்டிஷ் ஏர்வேஸின் தலைமை நிர்வாகி சீன் டாய்ல் "பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் அரசு வெளியிட்ட இந்த அறிவிப்பை வரவேற்கிறோம். அதே சமயத்தில், விமானப் பயணங்களை மீண்டும் தொடங்குவதற்கு மக்களுக்கு அனுமதி அளித்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது" என்றார்.