28 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில், 1973ஆம் ஆண்டு முதல் பிரிட்டன் அங்கம் வகிக்கிறது. இந்நிலையில், பிரிட்டனின் இறையாண்மை மற்றும் தனித்துவத்தை காப்பாற்ற ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என பல தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், இங்கிலாந்து பிரதமராக 2016ஆம் ஆண்டு பதவியேற்ற தெரசா மே பிரிக்ஸிட் தொடர்பாக பொது வாக்கெடுப்பை நடத்தினர். இதில் ஆதரவு கிடைக்க பெற்றதையடுத்து இந்தாண்டு மார்ச் மாதம் ஜரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் வெளியேற வேண்டிய சூழல் உருவானது.
இதற்கிடையே, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிறகு பிற நாடுகள் உடனான குடியேற்றம், வர்த்தகம் உள்ளிட்டவை மேற்கொள்வது குறித்த 'பிரிக்ஸிட்' வரைவு ஒப்பந்தத்தை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரசா மே சமர்பித்தார்.
இதற்கு தனது சொந்த கட்சியான கன்சர்வேடிவ் எம்.பி.க்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததோடு ஆறு அமைச்சர்கள் பதவிவிலகினர்.
இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தின் மீது கடந்த ஜனவரி மாதம் 15ஆம் தேதி நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 202 எம்.பி.க்கள் ஆதரவாகவும், 432 எம்.பி.க்கள் எதிராகவும் வாக்களித்ததால் ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டது.
இதனையடுத்து, தனது சொந்த கட்சி உறுப்பினர்களுக்கு இந்த ஒப்பந்தம் தொடர்பாக ஆதரவு கேட்டு கடிதம் ஒன்றையும் தெரசா மே எழுதியிருந்தார்.
இந்நிலையில், இன்று மீண்டும் இந்த ஒப்பந்தத்தின் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 242 பேர் ஆதரவாகவும், 391 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர். இதன் மூலம் பிரிக்ஸிட் ஒப்பந்தம் மீண்டும் தோல்வியை சந்தித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய பிரதமர் தெரசா மே, ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு இது சிறப்பான ஒப்பந்தமாகவே தாம் தொடர்ந்து நம்புவதாக தெரிவித்தார்.
முந்தைய வாக்கெடுப்பை விட இந்த முறை சொந்த கட்சியான கன்சர்வெடிவ் எம்.பிக்கள் 75 பேர் மட்டுமே இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக தற்போது வாக்களித்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாத வாக்கெடுப்பில் சொந்த கட்சியைச் சேர்ந்த 118 பேர் எதிராக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.