உலகெங்கும் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. சர்வதேச அளவில் 10இல் ஒருவர் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவலை கடந்த வாரம் உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது.
ஒருபுறம் கரோனாவுக்கு தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மறுபுறம், உலகிலுள்ள பெரும்பான்மையான மக்களுக்கு கரோனா வந்துவிட்டால், அவர்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி தானாக உருவாகும் என்றும்; கரோனா பரவலைத் தடுக்க இதுவே ஒரே வழி என்றும் கருத்து சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.
இந்நிலையில் திங்கள்கிழமை(அக்டோபர் 12) செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம், "Herd immunity எனப்படும் இந்த வகையான நோய் எதிர்ப்புச் சக்தி உலகிலுள்ள பெரும்பான்மையான நபர்களுக்கு தடுப்புமருந்தை அளிப்பதன் மூலமே ஏற்படுத்த முடியும்.
பொதுமக்களை வைரஸிடம் இருந்து பாதுகாப்பதன் மூலமே Herd immunity-ஐ பெற முடியுமே தவிர, அவர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படுவதால் இந்த நிலையை அடைய முடியாது. இந்த நிலையை அடைய குறைந்தபட்சம் உலகிலுள்ள 95 விழுக்காடு மக்களுக்கு தடுப்புமருந்தை நாம் அளிக்க வேண்டும்.
ஆனால், தற்போது உலகில் இருக்கும் 10 விழுக்காடு மக்களிடம் மட்டுமே கரோனா நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளது. மற்ற 90 விழுக்காடு மக்கள் கரோனாவால் பாதிக்கப்படும் அபாயம் அதிகமாகவே உள்ளது.
Herd immunity-ஐ பயன்படுத்தி வரலாற்றில் இதுவரை ஒரு பெருந்தொற்றை சமாளித்ததில்லை. அறிவியல் ரீதியாகவும் நெறிமுறை ரீதியாகவும் இது பிரச்னையான ஒன்று!" என்றார்.
சர்வதேச அளவில் இதுவரை 3.8 கோடி பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: நலமாக உள்ளேன் மருந்துகள் தேவைப்படவில்லை- மீண்டு வரும் ட்ம்ரப்