கோவிட்-19 தொற்று சீனாவில் படிப்படியாக குறைந்துவந்தாலும், மற்ற நாடுகளில் இதன் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. உலகளவில் கோவிட் -19 தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எட்டு லட்சத்தை தாண்டியுள்ளது. குறிப்பாக, ஐரோப்பா நாடுகளான இத்தாலி, ஸ்பெயினில் இதன் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிவருகிறது.
ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 சதவீதம் உயர்ந்துள்ளது. ஏற்கனவே கோவிட் -19 தொற்றால் 85,195 பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் புதிதாக 9222 பேருக்கு இந்த தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால், கோவிட் -19 தொற்றால் இதுவரை 94,417 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம், நேற்று ஒரே நாளில் 849 பேர் உயிரிழந்ததன் மூலம் உயிரிழப்புகளின் எண்ணிக்கை தற்போது 8,189ஆக உயர்ந்துள்ளது.
கோவிட்-19 தொற்றால் ஏற்கனவே ஸ்பெயினில் பொருளாதாரம் சரிவடைந்த நிலையில், அந்நாட்டு பிரதமர் பெட்ரோ சான்சேஸ் தலைமையிலான அரசு பொருளாதாரத்தை சரிசெய்யும் வகையில் புதிதாக 700 மில்லியன் யூரோக்கள் நிதி ஒதுக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில், வட்டி இல்லா கடன், வீட்டு வாடகை செலுத்த முடியாதவர்களுக்கான உதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும் அடங்கும்.
இதையும் படிங்க: அமெரிக்காவில் 3 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை