மரியுபோல்: உக்ரைனின் யவோரிவ் நகரில் அந்நாட்டு ராணுவப் பயிற்சி தளம் உள்ளது. அந்த ராணுவ தளத்தின் மீது ரஷ்யான இன்று (மார்ச் 13) வான்வெளி தாக்குதல் நடந்தியுள்ளது.
இந்தத் தாக்குதலில், இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 134 பேர் படுகாயமடைந்துள்ளனர் என உக்ரைன் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் குறித்து லிவ் மாகாணத்தின் கவர்னர் மாக்சிம் கோசிட்ஸ்கி கூறியதாவது,"யாவோரிவ் ராணுவ தளத்தின் மீது ரஷ்யா 30-க்கும் அதிகமான ஏவுகணைகளை ஏவித் தாக்குதல் தொடுத்தது.
இந்தத் தாக்குதல் தொடுக்கப்பட இடம், லிவிவ் மாகாணத்தின் வடமேற்கே 30 கிலோமீட்டர் தொலைவிலும், போலந்து - உக்ரைனின் எல்லையிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது" என்றார்.
மேலும், தாக்குதல் நடத்தப்பட்ட யாவோரிவ், உக்ரைனின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதியானது, உக்ரைன் வீரர்கள் போர்ப்பயிற்சி பெற்றுவந்த இடமாகும். அமெரிக்கா மற்றும் நேட்டா படைகள் தொடர்ந்து உக்ரைனிய படைவீரர்களுக்கு பயிற்சியளிக்க சர்வதேச அமைதி காத்தல் மற்றும் பாதுகாப்பு மையம் என்றழைக்கப்படும் பயிற்சிக்குழுவை அனுப்பிவருகிறது.
ரஷ்யப் படைகள், உக்ரைனின் தெற்கு பகுதியில் உள்ள மரியுபோல், தலைநகர் கீவ்வின் புறநகர்ப் பகுதி ஆகிய இடங்களில் நேற்று (மார்ச் 12) குண்டுவீச்சு தாக்குதல் நடத்தினர்.
இந்தப் போரினால், அதிகப் பாதிப்புக்கு உள்ளான நகரம் மரியுபோல் தான். அங்கு 4 லட்சத்திற்கும் அதிகமானோர் வசிக்கும் நிலையில், அவர்களுக்கான உணவு, குடிநீர், மருத்துவ வசதிகளை கொடுப்பதில் தொடர் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தொடர் தாக்குதலினால், அப்பகுதி மக்கள் பிற பகுதிகளுக்கு அதிகமாக வெளியேறுகின்றனர்.
இதுவரை, அங்கு 1500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், தொடர் தாக்குதல் இறந்தவர்களை புதைக்கும் பணியையும் பாதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரஷ்யாவின் 'உயிரி ஆயுத' நடவடிக்கை குற்றச்சாட்டு: முட்டாள்தனமானது என உக்ரைன் மறுப்பு