எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி எனப்படும் இரண்டாம் எலிசபெத் (வயது 96) - இளவரசர் பிலிப் (வயது 99) இருவரும் தங்களது 73ஆவது திருமண நாள் விழாவை இன்று (நவ.20) கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், தங்களது திருமண நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ராணி எலிசபெத்-இளவரசர் பிலிப் தம்பதியினர், தங்களது மூன்று பேரக்குழந்தைகளிடமிருந்து வாழ்த்து அட்டை ஒன்றை பரிசாகப் பெற்றுள்ளனர். இந்த வாழ்த்து அட்டையை இவர்கள் பிரித்துப் பார்க்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.
1947ஆம் ஆண்டு, நவம்பர் 20ஆம் தேதி வெஸ்ட்மின்ஸ்டர் அபே எனும் இடத்தில் லெப்டினன்ட் பிலிப் மவுண்ட்பேட்டனை மணந்தபோது ராணி எலிசபெத்துக்கு 21 வயது. 1952ஆம் ஆண்டு தொடங்கி, வரலாற்றில் வேறு எந்த பிரிட்டிஷ் மன்னரையும்விட நீண்ட காலம் ஆட்சி புரிந்து, ராணியாகத் திகழ்ந்து வருகிறார் இரண்டாம் எலிசெபத்.
ராணி இரண்டாம் எலிசபெத் தனது கடமைகளைத் தொடர்ந்து செய்து வரும் நிலையில், இளவரசர் பிலிப் பொது வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது இங்கிலாந்து நாட்டில் நாடு தழுவிய கரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், இந்தத் தம்பதியினர் தங்களை சுயமாகத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.