நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் மார்ச் 15ஆம் தேதி இரண்டு மசூதிகளில் சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதையடுத்து, நியூசிலாந்தின் துப்பாக்கி வைத்திருப்பதற்கான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் ஜெசிந்தா தெரிவித்திருந்தார். அதன்படி, தானியங்கி ராணுவ ரக துப்பாக்கிக்கு ஜெசிந்தா தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.
இதற்கிடையே, துப்பாக்கிச் சூடு சம்பவம் மிகவும் மனவேதனை அளித்துள்ளதாக இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தாக்குதலில் உயிரிழந்த 50 பேருக்கு அஞ்சலி செலுத்த இங்கிலாந்து இளவரசர் வில்லியம் ஏப்ரல் மாதம் நியூசிலாந்து செல்ல உள்ளதாக கென்சிங்டன் அரண்மனை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா வரவேற்றுள்ளார். மேலும், துப்பாக்கிச் சூட்டில் பலியானோரின் உறவினர்களை சந்தித்து இளவரசர் வில்லியம்ஸ் ஆறுதல் கூறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரெண்டன் டாரன்ட், ஏப்ரல் 5ஆம் தேதி கிறிஸ்ட் சர்ச் மாவட்ட நீதிமன்றத்தில் அடுத்தக்கட்ட விசாரணைக்காக மீண்டும் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.