இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் - டயானா தம்பதியரின் இளைய மகன் இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் அரச குடும்பத்தின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகப்போவதாக கடந்த வாரம் அறிவித்தனர். இதற்கு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தும் ஒப்புதல் அளித்தார்.
இந்நிலையில் பக்கிங்ஹாம் அரண்மனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "இளவரசர் ஹாரி - மேகன் தம்பதியினர் தங்கள் அரசு குடும்ப பதவியிலிருந்து விலகுவதால், அவர்கள் இனி Royal Highness என்ற பட்டத்தோடு அழைக்கப்படமாட்டார்கள். மேலும், ஃபிராக்மோர் இருப்பிடத்தை (Frogmore Cottage) புதுப்பிக்க ஆன செலவை அவர்கள் திருப்பித் தர விரும்புகின்றனர். அது அவர்களின் இங்கிலாந்து வீடாக தொடர்ந்து இருக்கும்.
வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கவுள்ள அவர்களுக்கு உறுதுணையாக இருந்த மகாராணிக்கும் அரசு குடும்பத்துக்கும் அவர்கள் நன்றி தெவித்துக்கொண்டனர்.
மேலும் புதிய ஒப்பந்தத்தின்படி, ராணுவம் உள்பட அனைத்து அரசு குடும்பக் கடைமைகளிலிருந்து அவர்கள் பின்வாங்க வேண்டியது அவசியம். அரசு கடமைகளை இனி மேற்கொள்ள அவர்கள் மக்கள் வரிப்பணத்தை பெறமாட்டார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்து மகாராணி எலிசபெத் சார்பில் வெளியிடப்பட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பில், "ஹாரி, மேகன், ஆர்ச்சி எங்கள் குடும்பத்தில் அதிகம் விரும்பப்படும் நபர்களாக இருப்பார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்கள் எதிர்கொண்ட சவால்கள் குறித்து நான் அறிவேன்.
புதிய வாழ்வை தொடங்கவுள்ள அவர்களுக்கு வாழ்த்துகள். நாட்டிற்காக இதுவரை அவர்கள் செய்த பணிகளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். மேகன் இவ்வளவு விரைவாக அரசு குடும்பத்தில் ஒரு உறுப்பினராக மாறியதில் எனக்கு பெருமை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'இளவரசர் ஹாரி, அவரது மனைவிக்கு வேலை வழங்கத் தயார்' - கலாய்த்த அமெரிக்க உணவகம்