உலகெங்கும் கோவிட்-19 தொற்றின் தாக்கம் தொடர்ந்து மோசமாகிவருகிறது. வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் பல முயற்சிகளை எடுத்துவருகிறது. அதேபோல கோவிட்-19 தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிக்க உலகெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் பெரும் முயற்சி செய்துவருகின்றனர்.
பொதுவாக ஒரு தொற்றுக்குத் தடுப்பு மருந்து தயாரிக்க 12 முதல் 18 மாதங்கள் வரை ஆகும். ஆனால் தற்போதுள்ள நெருக்கடியால் விரைவாகத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப் பல நாடுகளும் முயன்றுவருகின்றன. அமெரிக்காவில் ஏற்கனவே இரண்டு வகையான தடுப்பு மருந்துகள் மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட்டுவருகிறது.
அதேபோல இங்கிலாந்திலும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்க ஆராய்ச்சியாளர்கள் முயன்றுவருகின்றனர். கடந்த வாரம் வீடியோ கான்பரன்சிங் முறையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், தாங்கள் ஆய்வு செய்துவரும் தடுப்பூசி செப்டம்பர் மாதத்திற்குள் கிடைக்கும் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், தினசரி செய்தியாளர் சந்திப்பில் பேசிய இங்கிலாந்து சுகாதார செயலாளர் மாட் ஹான்காக், "ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சியாளர்களுக்கு 20 மில்லியன் பவுண்டுகளை வழங்க இங்கிலாந்து அரசு முடிவெடுத்துள்ளது. அதேபோல லண்டனின் இம்பீரியல் கல்லூரி ஆராய்ச்சியாளர்களுக்கு 22.5 மில்லியன் பவுண்டுகளை வழங்கவுள்ளோம்.
ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சியாளர்கள் மருந்து மற்றும் சுகாதார ஒழுங்குமுறை ஆணையத்துடன் இணைந்து பணியாற்றிவருகின்றனர். நாளை முதல் ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய தடுப்பு மருந்து மனிதர்கள் மீது பரிசோதிக்கப்படும்.
இது ஒரு புது வகையான வைரஸ். தினமும் இந்த வைரஸ் குறித்து புது விஷயங்களை கற்றுவருகிறோம். இருப்பினும் தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க நம்மால் முடிந்த அனைத்தையும் நாம் செய்துவருகிறோம். இந்த வைரசைக் கட்டுப்படுத்த தடுப்பு மருந்துதான் ஒரே வழி!" என்றார்.
ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சி குழு மருத்துவர் பேராசிரியர் ஆண்ட்ரூ பொல்லார்ட் கூறுகையில், "நாம் சரியான பாதையில் சென்று, நமக்கு எந்த தொழில்நுட்ப பிரச்னையும் இல்லாமல் இருந்து, அனைத்து வசதிகளும் சரியாகக் கிடைத்தால் இந்தாண்டு இறுதிக்குள் லட்சக்கணக்கான தடுப்பு மருந்துகளை நம்மால் தயாரிக்க முடியும்" என்றார்.
இதுவரை 500-க்கும் மேற்பட்டோர் இந்த கோவிட் -19 தடுப்பு மருந்து குறித்த சோதனையில் தங்களைத் தன்னார்வலர்களாகப் பதிவு செய்துள்ளனர். ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள இந்த வகையான தடுப்பு மருந்தை ஒரு வாரம் நிறைவடைந்த குழந்தை முதல் 90 வயதான நபர் வரை அனைவருக்கும் பயன்படுத்தலாம்.
இதையும் படிங்க: சீனாவின் பரப்புரை கருவியாகும் உலக சுகாதார அமைப்பு?