கடந்த அக்டோபர் 17ஆம் தேதி நியூசிலாந்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் தலைமையிலான லெபர் கட்சி மீண்டும் அதிரடியாக வெற்றி பெற்றுள்ளது.மூன்றில் இரண்டு பங்கு வாக்கு எண்ணிக்கை முடிந்தபோதே ஜெசிண்டா ஆர்டனின் லேபர் கட்சி 49.2 விழுக்காடு வாக்குகளை பெற்றுவிட்டது. இதன் மூலம், நியூசிலாந்து நாடாளுமன்றத்தின் 120 சீட்டுகளில் லேபர் கட்சிக்கு 64 சீட்டுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் தனது புதிய அமைச்சரவை பட்டியலை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “அடுத்த மூன்று ஆண்டுகள் நியூசிலாந்திற்கு மிகவும் சவாலானதாக இருக்கும். உலகளாவிய பார்வை மோசமடைந்து வருவதால், கோவிட் -19 உலகெங்கிலும் ஏற்பட்டுள்ள தாக்கத்திலிருந்து நாம் தப்பிக்க முடியாது. இதைக் கருத்தில் கொண்டு புதிதாக உருவாகியுள்ள அமைச்சரவைக்கு இரண்டு முக்கிய இலக்குகள் வழங்கப்பட்டுள்ளன.நாட்டின் பொருளாதார சரிவை மீட்டெடுக்கவும், கரோனாவை முற்றிலுமாக விரட்டவும் முழுவீச்சில் அவர்கள் பணியாற்ற வேண்டும்” எனத் தெரிவித்தார்.
கிடைத்த தகவலின்படி, தற்போதைய சுகாதார அமைச்சரான கிறிஸ் ஹிப்கின்ஸுக்கு கரோனா தொற்றை கையாளும் சிறப்பு பிரிவும் புதிய, சுகாதார அமைச்சராக ஆண்ட்ரூ லிட்டிலும் நியமிக்கப்படுகிறார்கள். மேலும், நானாயா மஹுதா வெளியுறவு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நியூசிலாந்து வரலாற்றில் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் ஆகும்.