சீனாவில் கடந்தாண்டு இறுதியில் கோவிட்-19 வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இப்போது வரை 190க்கும் மேற்பட்ட நாடுகளில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர், இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றால் பல நாடுகளிலும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டில் முடங்கிக்கிடக்கும் பலருக்கும் ஆறுதலாக இருப்பது வீட்டில் இருக்கும் செல்லப் பிராணிகள்தான். இருப்பினும், செல்லப் பிராணிகள் மூலம் வைரஸ் பரவுமா என்ற சந்தேகமும் பலருக்கு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், ஹாங்காங் பகுதியில் பூனை கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது. அதேபோல அமெரிக்காவிலும் புலி ஒன்றுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், பூனைகளை கோவிட்-19 தாக்குமா என்பதைக் கண்டறியச் சீனாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை மேற்கொண்டனர். அதன்படி ஐந்து பூனைகளுக்கு அதிதீவிரமான கரோனா வைரஸை செலுத்தியுள்ளனர்.
ஆறு நாள்களுக்குப் பின், அதில் இரு பூனைகளைக் கருணைக் கொலை செய்து, அவற்றை உடற்கூராய்வு செய்துள்ளனர். அந்த பூனைகளின் மூச்சுக் குழாய்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.
வைரஸ் செலுத்தப்பட்ட மற்ற மூன்று பூனைகளின் அருகில் ஆரோக்கியமாக இருக்கும் பூனைகளை வைத்துள்ளனர். ஆறு நாள்களுக்குப் பின், ஆரோக்கியமான பூனைகளிலும் சிலவற்றுக்கு மூச்சு விடுவதில் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டது.
சீன ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுகள் குறித்து பிரிட்டன் ராயல் கால்நடை கல்லூரிப் பேராசிரியர் கேன் ஸ்மித் கூறுகையில், "இந்தப் பூனைகளுக்கு மிகத் தீவிரமான கரோனா வைரஸ் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், இதில் ஆரோக்கியமான பூனைகளையும் நீண்ட நாள்கள் வைரஸ் செலுத்தப்பட்ட பூனைகளையும் அருகில் வசிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஆரோக்கியமான பூனைகளும் பாதிக்கப்பட்டன. இந்த இரண்டும் இயல்பாக நடக்காது.
மேலும், இந்த ஒரு ஆய்வை மட்டும் வைத்துக்கொண்டு நம்மால் ஒரு முடிவுக்கு வர இயலாது. இந்த ஆய்விலும்கூட பூனைகளிடமிருந்து மற்ற பூனைகளுக்குத்தான் வைரஸ் தொற்று (அதுவும் தற்காலிகமாக) பரவலாம் என்பது தெரிய வந்துள்ளது. இதுவரை பூனைகளிடம் இருந்து மனிதர்களுக்கு கோவிட்-19 பரவும் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை" என்றார்.
பூனைகளில் எவ்வாறு இந்த வைரஸ் மனிதர்களுக்குப் பரவலாம் என்பது குறித்துப் பேசிய அவர், "கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர், தனது பூனையுடன் விளையாடுகிறார் என்று வைத்துக்கொள்வோம்.
அப்போது, அவரிடமிருந்து அந்த வைரஸ் பூனையின் ரோமங்களில் படியலாம். பின், அதே பூனையை ஆரோக்கியமான ஒருவர் தொடும்போது அதன் ரோமங்களிலிருந்து அவருக்கு வைரஸ் பரவலாம்.
எனவே, வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வீட்டிலுள்ள செல்லப் பிராணிகளை வெளியே விடக்கூடாது. இதுவே நாங்கள் இப்போது அளித்துவரும் பரிந்துரை" என்றார்.
இதையும் படிங்க: ரூபாய் நோட்டு மூலம் பரவுமா கரோனா - அதிர்ச்சியளிக்கும் புதிய தகவல்!