மும்பையைச் சேர்ந்த நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி கடன் பெற்றுவிட்டு, அதை திரும்பச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பினார். அவரை நாடு கடத்த மத்திய அரசு பல முயற்சிகளை எடுத்து வந்தது.
இந்நிலையில், கடந்த மார்ச் 20ஆம் தேதி நிரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டார். அன்றைய தினமே அவர் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை நிராகரித்த நீதிமன்றம், அவரை மார்ச் 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது.
அவரது நீதிமன்ற காவல் முடிந்த மார்ச் 29ஆம், அவர் தர்பபில் மீண்டும் பிணை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம், பிணை மனுவை இரண்டாவது முறையாக மீண்டும் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், நிரவ் மோடி பிணை கோரி வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம், நிரவ் மோடி பிணையில் வெளி வந்தால், அவர் மீண்டும் சரணடைய தவறிவிடுவார் என்றும், சாட்சிகளை கலைக்க முயற்சிப்பார் எனவும் கூறி பிணை மனுவை நிராகரித்தது. மேலும், நிரவ் மோடியை நாடு கடத்துவதற்கான வழக்கின் விசாரணை வரும் 30ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவித்தது.