புதிய கரோனா வைரஸான கோவிட்-19 பெருந்தொற்று நோய் காரணமாக உலகமே முடங்கியுள்ளது. இந்த பாதிப்பிலிருந்து நாடுகள் மீண்டெழும் வகையில், அனைத்து மக்களும் தங்களால் இயன்ற பணம் அல்லது பொருள் உதவி அளித்துவருகின்றனர்.
இந்த நிலையில் ஹாரிபார்ட்டர் ஆசிரியர் ஜே.கே. ரவுலிங்(54), ஒரு மில்லியன் (10 லட்சம்) பவுண்டு நிதியுதவி அளித்துள்ளார். இந்தத் தகவலை மே 2-ஆம் தேதி நடந்த ஹாக்வார்ட்ஸின் 22ஆவது ஆண்டு விழாவில் தெரிவித்தார்.
ஒவ்வொரு வருடமும், நடைபெறும் ஆண்டு விழாவில், பிரெட் வீஸ்லி, செவெரஸ் ஸ்னேப், டாபி போன்ற கதாபாத்திரத்தை கொன்றதற்காக மன்னிப்பு கேட்பது ஒருவகை பாரம்பரியமாக மாறிவிட்டது.
ஆனால், இம்முறை வழக்கத்துக்கு மாறாக நன்கொடை அளித்து நிகழ்வை நினைவு கூர்ந்தார் ஜே.கே. ரவுலிங். விழாவில் பேசிய ஜே.கே. ரவுலிங், “இந்த வகையான நெருக்கடி காலக்கட்டத்தில் எப்போதும்போல, ஏழ்மையான மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே ஹாக்வார்ட்ஸ் போரின் நினைவாக, நான் 10 லட்சம் பவுண்டு நன்கொடை அளிப்பேன். அதில் பாதி தொகை, கரோனா நெருக்கடி நிவாரணத்துக்கு செல்லும். மீதி உதவி தொற்று நோய்களின் போது வீடற்றவர்கள் மற்றும் அகதிகளுக்கு செல்லும்.
ஏனெனில் முழு அடைப்பின் போது, வீடு சார்ந்த துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளது” என்றார். இதையடுத்து ட்விட்டரில் ஜே.கே. ரவுலிங், “ஹாக்வார்ட்ஸ் போரின் 22ஆவது ஆண்டுவிழாவில் இன்று சந்திக்கிறோம். நான் நேர்மையாக இருக்கப் போகிறேன். கற்பனையான மரணங்களைப் பற்றி இன்று பேசுவது பொருத்தமற்றது என்று நினைக்கிறேன். உண்மையான உலகில் ஏராளமானோர், தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து கொண்டிருக்கிறார்கள்" என்று கூறியிருந்தார்.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜே.கே.ரவுலிங்கின் கணவர் மருத்துவர் ஆவார். இவர் எழுதிய நாவல்களுக்கு உலகம் முழுக்க வாசகர்கள் உள்ளனர். கடந்த மாதம் தனக்கும் கரோனா பாதிப்பு அறிகுறிகள் இருந்ததாக கூறிய ஜே.கே. ரவுலிங், இரண்டு வாரங்களாக தனிமைப்படுத்தப்பட்டதாகவும் தற்போது பூரண குணமடைந்துவிட்டதாகவும் கூறினார்.
மேலும், “தான் அளித்துள்ள கரோனா நிவாரண நிதி சரிசமமாக அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு பிரித்தளிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: உலகை உலுக்கும் கரோனா, 36 லட்சம் பேர் பாதிப்பு