உலகை ஆட்டிப்படைக்கும் கரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். விரைவாக தடுப்பு மருந்தை கண்டறிய பிரிட்டன் அரசு, கரோனா சிறப்பு குழுவையும் அமைத்துள்ளது. அந்நாட்டிலுள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பேராசிரியர்கள் உருவாக்கிய கரோனா தடுப்பு மருந்து தற்போது மனிதர்கள் மேல் சோதிக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நடத்தும் கரோனா தடுப்புமருந்து வீடியோ கான்பரன்சிங் உச்சி மாநாட்டில் பங்கேற்பதை இந்தியா தற்போது உறுதி செய்துள்ளது. குறைந்தபட்சம் 35 நாடுகளின் தலைவர்கள் உரையாற்றவுள்ள இந்த மாநாட்டில், இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடியோ அல்லது உயர் அலுவலரோ உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உச்சி மாநாட்டின் மூலம் சுமார் 7.4 மில்லியன் டாலர்களை சர்வதேச தடுப்பு மருந்து அமைப்பான கேவிக்கு திரட்ட பிரிட்டன் முடிவுசெய்துள்ளது. இது குறித்து தெற்காசிய மற்றும் காமன்வெல்த் நாடுகளுக்கான அமைச்சர் லார்ட் தாரிக் அகமது கூறுகையில், "இந்தியாவிடமிருந்து எங்களுக்கு கிடைத்த பதில் நம்பிக்கையளிக்கும் வகையில் இருக்கிறது. கேவியில் இந்தியாவின் பங்கேற்பு என்பது எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிட முடியாதது.
சர்வேதச அளவில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளில் 50 விழுக்காடு இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் கரோனா தடுப்பு மருந்தின் உற்பத்தியில் இந்தியாவின் பங்கேற்பு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
இந்தியாவால் அதிகளவில் மருந்துகளை உற்பத்தி செய்ய முடியும் என்பதால், பல்வேறு நாடுகளுக்கும் தேவையான தடுப்பு மருந்தை எளிதில் உற்பத்தி செய்து விநியோகிக்க முடியும்" என்றார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு கரோனா தவிர மற்ற தொற்றுகளால் பாதிக்கப்படும் ஏழை நாடுகளில் உள்ள 300 மில்லியன் குழந்தைகளுக்கு தடுப்பு மருந்தை அளிக்க இந்த உச்சி மாநாட்டின் மூலம் திரட்டப்படும் நிதியை பயன்படுத்த பிரிட்டன் முடிவு செய்துள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் பரிசோதனையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின்!