ஜெனீவாவில் நடைபெறும் உலக சுகாதார அமைப்பின் இரண்டு நாள் அமர்வில் இந்தியா உட்பட 60க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் இரண்டு நாள் அமர்வு இன்று தொடங்கவுள்ளது. இதில், சீனாவின் வூஹான் நகரில் வைரஸ் எவ்வாறு உருவானது என்பதை விசாரிக்க கடந்த சில நாட்களுக்கு முன்னர், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தியதின் பின்னணியில் விசாரணை நடைபெறத் தீர்மானம் முன்வைக்கப்பட்டது.
கோவிட்- 19 தொற்று பரவிய விதம் குறித்து பக்கச்சார்பற்ற, சுயாதீனமான விசாரணை நடத்த ஐரோப்பிய ஒன்றியத்தால் முன்வைக்கப்பட்ட வரைவுத் தீர்மானத்தை இந்தியா, ஆஸ்திரேலியா, வங்காளதேசம், பூட்டான், பிரேசில், கனடா, சிலி, ஐஸ்லாந்து, இந்தோனேசியா, ஜப்பான், ஜோர்டான், கஜகஸ்தான், மலேசியா, மாலத்தீவு, மெக்ஸிகோ உள்ளிட்ட பல நாடுகள் ஆதரித்துள்ளன. இந்த நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா இடம் பெறவில்லை.
உலக சுகாதார அமைப்பின், சுகாதார அவசரகாலத் திட்டத்தை வலுப்படுத்துவது, உலகளாவிய தொற்று நோய்த்தடுப்பு வழிமுறைகளை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை வழங்குவதற்கு இந்த வரைவுத் தீர்மானம் உந்தியுள்ளது.
மேலும், வைரஸின் உயிரியல் மூலத்தை ஆராய்வதற்கும், அது எவ்வாறு மக்களுக்கு பரவுகிறது என்பதை ஆராயவும் ஐ.நா. மன்றத்தின் பல்வேறு அமைப்புகளான விலங்குகள் நல அமைப்பு, உணவு மற்றும் விவசாய அமைப்பு, உள்ளிட்ட அமைப்புகளுடன் தொடர்ச்சியான வேலைகளை முன்னெடுக்கவும் இது வழிசெய்கிறது.
விலங்குகள், மனிதர்களிடையே கோவிட்-19 நோய்த் தொற்றை எவ்வாறு தடுப்பது மற்றும் புதிய தொற்று பரவுவதைத் தடுப்பது குறித்த வழிகாட்டுதலை இந்த அமர்வு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அமர்வில், மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் காணொலி கான்ஃபெரன்சிங் மூலம் பங்குபெறுகிறார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: வூஹான் நகரவாசிகள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை - சீனா திட்டம்