ஐ.நா. சபையின் 75ஆவது ஆண்டு தினத்தினை நினைவுகூரும் வகையில் பொதுசபை கூட்டம் ஒன்று தொடங்கி நடந்துவருகிறது. இதில், கரோனா தொற்றின் காரணமாக நேரடியாக கலந்துகொள்ள முடியாத உலகத் தலைவர்கள் பலர் பேசிய காணொலிகள் ஐ.நா. வரலாற்றில் முதன்முறையாக ஒளிபரப்பப்பட்டுவருகிறது.
இந்நிலையில், நேற்று ஐநாவில் சபையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசிய காணொலி வெளியானது. அதில் அவர், இந்தியா எப்படி சிறுபான்மையினரை நடத்துகிறது என்றும் ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் அதன் பிறகான இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகள் குறித்து விமர்சனம் வைத்தார்.
காஷ்மீர் விவகாரத்தைத் தீர்க்காமல் தெற்காசியாவில் அமைதி ஏற்படுவது கடினம், சர்வதேச சட்டத்திட்டங்களின்படி காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வுகாண வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்னர் சர்ச்சையைத் தூண்டிய நபி கார்ட்டூனை மீண்டும் வெளியிட்டதற்காக சார்லி ஹெப்டோவை கடுமையாகச் சாடினார். ராஸ்திரிய ஸ்வயம் சேவக் சங்கத்தை நாஜிகளுடன் ஒப்பிட்டது மட்டுமின்றி ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான ஆட்சிதான் பிராந்தியத்தில் அமைதியின்மைக்கு காரணம் எனவும் விமர்சித்தார்.
இந்தியாவுக்கு எதிராகப் பல குற்றச்சாட்டுகளை இம்ரான் கான் வைக்கத் தொடங்கியதுமே அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்வகையில் இந்தியாவுக்கான ஐ.நா. குழுவின் முதன்மைச் செயலர் மிஜிதோ வின்ட்டோ கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்தார்.
பின்னர், மிஜிதோவுக்கு ஐ.நா.வில் பேச வாய்ப்பு கிடைக்கையில், "உலகிற்கு அவரால் எந்த ஒரு அறிவார்ந்த தீர்வையும் வழங்க முடியவில்லை. அவரது பேச்சு, பொய்கள், தவறான தகவல்கள், போர் ஆவேசம் மற்றும் தீங்கு விளைவிக்கும் தன்மைகளுடன் விளங்கின. அவரின் உரை ஆவேசமான இடைவிடா உளறல்" எனப் பாகிஸ்தான் பிரதமரின் பேச்சுக்குப் பதிலடி கொடுத்து பேசினார்.