சீனாவின் வூஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கோவிட்-19 பெருந்தொற்று, தற்போது உலகம் முழுவதும் பரவி அனைத்து தரப்பினரையும் ஆட்டம் காணச் செய்துள்ளது.
மின்னல் வேகத்தில் பரவி வரும் இந்த நோய்க் காரணமாக உலகளவில் இதுவரை மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நோய் பரவலைக் கட்டுப்படுத்த உலக நாடுகளில் ஊரடங்கு, பயணத் தடை அமலில் உள்ளதால் சர்வதேச பொருளாதாரம் வரலாறு காணாத அளவிற்கு சரிவைச் சந்தித்துள்ளது. இதனிடையே, இந்த பேரிடர் ஏற்படுவதற்கு உலக சுகாதார அமைப்பின் மெத்தனப் போக்கே காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், ஜெனீவாவில் நடைபெற்றும் வரும் உலக சுகாதார அமைப்பின் 73ஆவது வருடாந்திர கூட்டத் தொடரில், கோவிட்-19 நோய்த் தடுப்பு பணியில் உலக சுகாதார அமைப்பு ஆற்றிய பங்கு குறித்து சுயாதீன விசாரணை மேற்கொள்ள ஆஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் கொண்டுவந்துள்ளது. இந்தத் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்தியா தவிர, ஜப்பான், பிரிட்டன், நியூசிலாந்து, தென் கொரியா, பிரேசில், கனடா ஆகிய நாடுகளும் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவு அளித்துள்ளன.
இதையும் படிங்க : ஊரடங்கை தளர்த்தினால் நிலைமை இன்னும் மோசமாகலாம் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!