உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு தற்போது உச்சத்தை அடைந்துள்ளது. உலகம் முழுவதும் இதுவரை சுமார் மூன்று லட்சம் பேர் இந்தப் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 13 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் உள்ள வூஹான் பகுதியில்தான் இந்த வைரஸ் பாதிப்புத் தொடங்கியது. இருப்பினும் சீனாவைக் காட்டிலும் தற்போது ஐரோப்பிய நாடான இத்தாலிதான் கரோனாவால் கடும் பாதிப்பைச் சந்தித்துவருகிறது. கோவிட்-19 காரணமாக சீனாவில் இதுவரை சுமார் மூன்றாயிரத்து 255 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இத்தாலியில் நான்காயிரத்து 800 பேருக்கு மேல் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. மேலும், 53 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வளவு பெரும் பாதிப்பு இத்தாலிக்கு நேரும் என யாரும் எதிர்பார்க்காத நிலையில், இந்தப் பாதிப்பு ஏற்பட கடந்த பிப்ரவரி மாதம் இத்தாலி மேற்கொண்ட ஒரு செயலே காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பிப்ரவரி மாதத்தில் கரோனா பாதிப்பு இத்தாலியில் ஆரம்பகட்ட நிலையில் இருந்தபோது சீனர்கள் மீது அந்நாட்டில் ஒரு அச்சம் பரவத் தொடங்கியதாகத் கூறப்படுகிறது. சீனர்கள் மீது அங்கு இன ரீதியான ஒரு அச்ச உணர்வு ஏற்பட்டதால் விலக்கம் ஏற்படத் தொடங்கியது. இதைத் தடுக்க இத்தாலி ஒரு புது முன்னெடுப்பை மேற்கொண்டது.
கடந்த ஜனவரி மாத இறுதியில் இத்தாலி நாட்டில் சீனர்கள் இருவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். சீனர்களைத் தனிமைப்படுத்துவதன் மூலம் சீனர்கள் மீதான இனவெறி விலக்கம் இத்தாலியில் ஏற்படக் கூடாது என்பதற்காக அந்நாட்டில், 'ஹக் என சைனீஸ்' (Hug a Chinese) என்ற முன்னெடுப்புத் தொடங்கப்பட்டது.
அதன்படி, சீனர்கள் மீதான தனது அன்பை வெளிப்படுத்தும்விதமாக, வசூல் ராஜ படத்தில் வரும் 'கட்டிப்பிடி வைத்தியம்' போல் இத்தாலி மக்கள் தங்கள் நாட்டில் உள்ள சீனர்களைக் கட்டித் தழுவத் தொடங்கினர்.
குறிப்பாக இத்தாலியில் உள்ள ஃப்ளோரன்ஸ் நகர மேயரே இந்தச் 'சீனர்களைக் கட்டி அணைப்போம்' முன்னெடுப்பை மக்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவித்தார். கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாக்க வைரஸ் பாதித்தவர்கள் தனிமையில் வைக்கப்படவேண்டும் எனவும், மக்கள் நெருக்கமாகப் புழங்குவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இப்படியிருக்க இத்தாலியில் கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொண்ட இந்த நடவடிக்கையை இத்தகைய மோசமான விளைவுகளைத் தற்போது சந்திப்பதற்கான காரணம் என்ற கடும் விமர்சனம் தெரிவிக்கப்படுகிறது.
கரோனா பாதிப்பின் மையக்களமாகத் தற்போது இத்தாலி மாறியுள்ளது. நாளொன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரசால் பாதிக்கப்பட்டும், 500-க்கும் மேற்பட்டோர் பெருந்தொற்றால் உயிரிழந்தும்வருகின்றனர். அங்கு மருத்துவமனைகள் போதிய வசதிகள் இல்லாமல் நோயாளிகளால் நிரம்பிவருவதையடுத்து சுகாதாரத் துறையினர் கடும் உளைச்சளுக்கு ஆளாகியுள்ளனர்.
இதையும் படிங்க: கரோனாவை அலட்சியமாக கையாண்ட பெண்ணின் தந்தை மீது எஃப்ஐஆர் பதிவு!