உலகளவில் பெரும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்திவரும் கரோனா வைரஸ் தொற்றினைக் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களை நோயிலிருந்து மீட்கவும் பல்வேறு நாடுகளும் தடுப்பு மருந்துகளை கண்டறியும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.
அந்தவகையில், லண்டனிலுள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கரோனா வைரஸினைக் கட்டுப்படுத்தும் தடுப்பு மருந்தினை உருவாக்கும் ஆரம்பகட்ட சோதனையில் ஈடுபட்டுவந்தனர்.
சுமார் ஆயிரம் பேரைக் கொண்டு நடைபெற்றுவந்த இந்தச் சோதனையில் ஈடுபட்ட 50 விழுக்காட்டினருக்கு தடுப்பு மருந்துகள் அளித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அவர்களின் உடலில் எத்தகைய நோய் எதிர்ப்பு சக்திகள் தூண்டப்படுகின்றன என்பதை வல்லுநர்கள் குழு கண்டறிந்து வந்ததாகவும் தெரிவித்தனர்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஜென்னர் நிறுவனத்தின் இயக்குநர் மருத்துவர் அட்ரியன் ஹில் கூறுகையில்,” தடுப்பு மருந்து பாதிக்கப்பட்ட நோயாளிகளின் நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு தூண்டுகிறது என்பதை கண்டறிவதை இந்தச் சோதனை நோக்கமாக கொண்டுள்ளது. தொற்றுநோயைத் தடுப்பதற்கான மூலக்கூறுகள் நடுநிலையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும், இந்த தடுப்பூசி டி-செல்களை வைரஸிற்கு எதிராக போராட தூண்டுகிறது.
இந்தப் பரிசோதனையை, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளைச் சேர்ந்த பத்தாயிரம் தன்னார்வலர்களைக் கொண்டு நடத்தியுள்ளோம். இதற்கிடையில், அமெரிக்கா, 30 ஆயிரம் பேரை பயன்படுத்தி பரிசோதனைகள் மேற்கொள்ளும் பணிகளில் ஈடுபட்டுவருகிறது.
இந்தத் தடுப்பு மருந்து எவ்வாறு பயனளிக்கிது என்பது, தடுப்பு மருந்தின் உபயோகத்தைப் பொருத்தே தெரியவரும். இதற்கான தரவுகளும் இந்த ஆண்டு இறுதிக்குள் தயார் நிலையில் இருக்கும் என்றார்.
மேலும், இந்த தடுப்பு மருந்துகள் நோயிலிருந்து மீண்ட மக்களின் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை தொடர்ந்து அதிகரிப்பதாகவும், இதற்கு டி- செல்கள் உதவிபுரியும் எனவும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இதற்கிடையில், ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்திடம் 10 கோடி தடுப்பு மருந்துகளை கொள்முதல் செய்ய பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இதையும் படிங்க: பரிசோதனையில் நல்ல முன்னேற்றத்தை அளித்த கரோனா தடுப்பு மருந்து!