லண்டன்: மறைந்த இங்கிலாந்து இளவரசி 1995ஆம் ஆண்டு பிபிசி செய்தி நிறுவனத்திற்குக் கொடுத்த நேர்காணலில் அரண்மனை ரகசியங்களை பொதுவெளியில் பேசியதால் சர்ச்சையானது.
இந்த நேர்காணல் தொடர்பாக பிபிசி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி லார்ட் டைசன் விசாரணை நடத்தினார். அந்த விசாரணையின் அறிக்கை அண்மையில் வெளியானது. அதில், பிபிசி முறைகேடுகளைச் செய்தது உறுதிசெய்யப்பட்டது.
அந்த அறிக்கையில், "டயானாவை கண்காணிக்க தனிப்பட்ட நபர்களுக்கு பணம் வழங்கப்பட்டது போன்று போலியாக வங்கிக்கணக்குகளை பிபிசி செய்தி ஆசிரியர் பஷீர் உருவாக்கியுள்ளார். இதனை டயானாவின் சகோதரரிடம்காட்டி அவரின் நம்பிக்கையைப் பெற்று, டயானாவை நேர்காணல் செய்துள்ளார். இந்த முறைகேடுகள் குறித்து பிபிசிக்கு தெரிந்திருந்தும் அதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. டயானாவிடம் நேர்காணலில் வார்த்தைகளை வாங்குவதற்காக பல்வேறு சதித்திட்டங்களை ஊடகவியலாளர் பஷீர் மேற்கொண்டார். மேலும், 1996ஆம் ஆண்டு பிபிசி நடத்திய உள்ளக விசாரணையில் வெளிப்படைத் தன்மை இல்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 25 வருடங்களுக்குப் பிறகு, பிபிசியின் முறைகேடுகள் உறுதியான நிலையில், அந்த நேர்காணலின் போது பிபிசி இயக்குநராக இருந்த ஹால் அச்சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், தான் வகித்த தேசிய கேலரி அறங்காவலர் பொறுப்பிலிருந்தும் விலகியுள்ளார். இளவரசர் வில்லியம், அவரது சகோதரர் ஹாரி ஆகியோர் பிபிசியை விமர்சித்துள்ளனர்.
"1996ஆம் ஆண்டு பிபிசியின் உள்ளக விசாரணை உண்மையாக நடத்தப்பட்டிருந்தால், தான் ஏமாற்றப்பட்டிருப்பதை எனது தாய் அறிந்திருப்பார். எனது தாயின் மரணத்திற்கு மோசமான ஊடக கலாசாரமே காரணம்" என ஹாரி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இளவரசி டயானாவின் 1995 இன்டர்வியூ சர்ச்சைகள் - பிபிசியுடன் கைக்கோக்கும் முன்னாள் நீதிபதி!