ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னிக்கு கடந்த 21ஆம் தேதி (ஆக. 21) விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சைபீரியாவிலிருந்து மாஸ்கோவுக்கு அவர் விமானத்தில் வந்தபோது இந்த சம்பவம் ஏற்பட்டது. விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டு அவருக்கு முதற்கட்ட சிகிச்சை ரஷ்யாவில் அளிக்கப்பட்டது.
அவர் கோமாவுக்கு சென்ற நிலையில், மேல்சிகிச்சைக்காக ஜெர்மனி கொண்டுசெல்லப்பட்டார். இந்நிலையில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அவர் உடல்நிலை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இந்த அறிக்கை தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் முக்கிய கருத்தை வெளியிட்டுள்ளது.
இது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத் துறை தூதர் ஜோசப் போரேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், சைபீரியாவில் அலெக்ஸி நவல்னி தங்கியிருந்தபோது அவருக்கு விஷம் கொடுத்ததற்கான தடயங்கள் மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளன. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக ரஷ்யா சுதந்திர விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரியுள்ளார்.
அதேவேளை, ரஷ்யாவில் முதற்கட்ட சிகிச்சை அளித்த மருத்துவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். அதிபர் விளாதிமிர் புதினை தீவிரமாக விமர்சித்து வரும் அலெக்ஸிக்கு இதுபோன்ற திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது ரஷ்ய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஜப்பான் பிரதமரின் புதிய சாதனை!