கரோனா வைரஸ் காரணமாக பல நாடுகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். தினந்தோறும் இந்நோயால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரோனா வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்காத காரணத்தினால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர்கள் தான் கரோனாவிலிருந்து மீண்டு வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள எமோரி பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் புதிய ஆய்வு ஒன்றை நடத்தினர். அதில், கரோனா வைரஸ் உறுதியான ஆறு நாள்களுக்குள் உடலில் வைரஸை நடுநிலைப்படுத்தும் ஆன்டிபாடிகள் (virus-neutralizing antibodies) உருவாவது தெரிய வந்தது. கரோனாவை வென்ற நோயாளிகள் மற்றவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்திகளை வழங்க முடியுமா என்பதையும் ஆய்வு செய்கின்றனர்.
ஆன்டிபாடி என்பது வைரஸை எதிர்த்துப் போராடும்போது, நோய் எதிர்ப்பு மண்டலத்தில் சிறிய புரோட்டீன்களாக உருவாகின்றன. இது நாள்கள் செல்ல செல்ல அதிகப்பலம் பெற்று, நோயுடன் போராடி வென்றுகாட்ட உதவிகரமாக உள்ளன.
இதுகுறித்து எமோரி பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் மருத்துவர் மெஹுல் எஸ். சுதார் கூறுகையில், "இச்சோதனை முடிவுகள் SARS-Covid வைரஸ்களுக்கு எதிரான பாதுகாப்பு நோய் எதிர்ப்பு சக்தியைப் புரிந்துகொள்வதிலும், தேவையான தடுப்பூசிகளின் வளர்ச்சியை மேம்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களின் இரத்தத்திலிருந்து சுறுசுறுப்பான பிளாஸ்மாவின் பயன்பாடுகளுக்கும் உதவிகரமாக உள்ளது" என்றார்.
இந்த ஆய்விற்குப் பயன்படுத்தப்பட்ட 44 நோயாளிகளின் ரத்த மாதிரிகளும், எமோரி பல்கலைக்கழக மருத்துவமனையில் கரோனாவுக்காக சிகிச்சையளிக்கப்பட்ட நோயாளிகளிடமிருந்து எடுத்துவரப்பட்டது ஆகும்.
இதையும் படிங்க: குழந்தைகளை பாதிக்கும் கோவிட்-19 குறித்து விளக்கும் புதிய ஆய்வு!